
இன்று (18.11.2022) விருட்சம் கவிதை நேசிக்கும் அமர்வில் வாசித்த கவிதை.
கங்கை நதி ஒரு
வற்றாத ஜீவ நதி
விண்ணிலும் மண்ணிலும் தன்னிலும் அண்டி வாழும் ஜீவன்களின் அன்னபூரணி
கற்பனைத் தூரிகைக்கு
வற்றாத மையூற்று
காலையில் உருகும் பொன்னாய்.. மாலையில்
நாணும் பெண்ணாய்..
வளைந்து நெளிந்து
உந்திச் சுழியாய்
சுழன்று ஓடும்
அழகான உயிரோட்டம்..
சலங்கைகளின் சிணுங்கல்களுணடு
வளையல்களின் சிரிப்பொலியுண்டு
ஓயாத பேச்சும்
ஆழ்ந்த மௌனமும்
அடங்காத ஆர்ப்பரிப்பும்
உண்டு அவளிடம்
இடம் காலம் பொறுத்து..
கதிர் மதி கவின்மிகு
தாரகை யாவையும்
தாலாட்டும் தாயும் அவளே
அனைவரின் மூத்தவள்
இதிகாசக் கதை சொல்லி
யௌவனப் பாட்டி
பாரதத்தின் பழம் பெருமை யாவையுமே தான் அறிந்த ஆவணச் சான்றும் அவளே
உருத்திர பூமியின்
அஸ்தியும் கொள்வாள்
உத்திர கிரியையின்
படையலும் கொள்வாள்
ஊழிகள் பலகண்டாலும்
உயிர்த்தெழுந்த ஜீவநதி
இன்று
பாழும் இரசாயனக்
கழிவுகள் யமுனைவழி
கண்டுமிகக் கலங்குகின்றாள்
கண்டத்தில் விடமிறங்கக்
கண்டிருத்தல் முறயாமோ
அரசியலால் ஆகாது
ஆர்வலர்கள் அலறுவதும்
யாருமில்வை செவிமடுக்க
பாரதத் தாயின்
பவித்திரக் கொடையதனை
பூதகியின் நச்சு முலை ஆக்கிடுதல் பொறுப்பதுவோ?
