கொக்கு பிச்சமூர்த்தி கவிதை 18/11/22 அன்று விருட்சம் நிகழ்வில் பேசியது/பானுமதி

படிகக் குளத்தோரம்
கொக்கு
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு,

உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்குக்
கட்டாயக் கட்டணம்.
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்…

வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு –
தெரிவதே போதாதா?

நண்பர்களுக்கு வணக்கம். நமது சொல் புதிது, கதை புதிது, குவிகம் இலக்கியத் தகவல் ஆகியவைகளில் இடம் பெற்றுள்ள அனைவரும் மிகுந்த திறமைசாலிகள். நல்ல கவிதை உணர்வும், சொல்லாக்கங்களும், இரசனையும் கொண்டவர்கள். நான் பதிவுகளைத் தவறாமல் படித்தாலும் சற்று முன்னே பின்னே படிப்பேன். எதிர்வினையாற்றுவதற்கான நேரம் கடந்துவிடும். எனவே என் அமைதியைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னளவில் இந்தக் கவிதையை நான்கு வகைகளில் பொருள் கொள்ளலாம். காட்சிப் படுத்தல், உருவேற்றல், மீபொருண்மைக் கூறு, ஆழமான தத்துவம்.

முதலில் காட்சிப் படுத்துதல்- குளம்- படிகம்- தெளிவான நீர்; ஓரத்தில் கொக்கு; செங்கால், வெண்பட்டுடல், கூரான மஞ்சள் மூக்கு. நீரை நோக்கும் பார்வையில் தாழ்ந்த முடி. அதன் இந்த இருப்பிற்கு அழகிருக்கிறது. மீனும், நிழலுமான அழகு- அதற்கான கட்டணம் உண்டு. குளப்பரப்பில் நாம் காணும் நம் அழகுடன் கவிதை முடிகிறது.

எப்படியான உருவேற்றம் இதில்? குளம் அமைதியாக, தெளிவாக, படிகமாக இருக்கிறது. அதன் ஓரத்தில் ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கிறது கொக்கு’. ஓடிச் செல்லும் மீன்கள் கொக்கின் கால்களைக் கடித்துக் கழுவும்; ஆனாலும், தன் இரை வரும் வரை கொக்கு அமைதியாக இருக்கும். எனவேதான் சிலவேளை மீன் அதற்குப் போதும். பலவேளைகளில் தவமிருப்பது போல் தன்னுள் அமிழ்ந்திருக்கும் கொக்கு, நீரைப் பார்த்து தன் நிழலைப் பருகி இருக்கிறது. ‘கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்றும் அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து.’ (இன்றும் கூட மீன் தொட்டிகளில் காலை வைத்து இறந்த திசுக்களை நீக்கும் மருத்துவ முறை உண்டு.)

மீபொருண்மையை இதில் எப்படிப் பார்ப்பது? நெடுக்கு, குறுக்கு என்ற அபாரமான சொல்லாட்சிகளில். குறுக்கும் நெடுக்குமான கோடுகள் இடை வெட்டும். நான்கு பக்கங்களிலும் சமமாக உள்ள சதுரம், இடை வெட்டும் இணைக்கும் கோடுகளால் ஆனது; இரு பக்கங்கள் சமமாக உள்ள செவ்வகத்திலும் அதே கதை தான் ஆனால், வட்டத்தில் கோடுகள் உண்டா? அது சூன்யத்தையும், பூரணத்தையும் ஒரே நேரம் குறிக்கும் ஒன்றல்லவா? குறுக்கும் நெடுக்குமாக இருப்பதால் பூரணமின்மை சொல்லப்படுகிறது. செங்கால் என்பது ரஜோ குணம்; வெண்மை சாந்த குணம்; மஞ்சள் மூக்கில் தமோ குணம்-ஏனெனில் அது அனைத்து மீன்களையும் எப்போதுமே கொத்தித் தின்பதில்லை. முக்குணங்களால் ஆன நம்மை பிரதிபலிக்கிறது கொக்கு.

சரி, தத்துவம்? வாழ்வும் குளம், செயலும் கலை, சிலவேளை மீனழகு, பலவேளை நிழலழகா? எதுவாயினென்? தவறாது குளப் பரப்பில் நம்மழகு தெரிவதே போதாதா? ஸ்படிகக் குளத்தில் மீனுண்டு, அதைச் சாப்பிட கரையில் அமரும் கொக்கும் உண்டு. வாழக்கைக் குளத்தில் நம் நிழலை நாம் உண்மையெனப் பார்க்கிறோம். அந்த நிழல் நம்மைப் போலவா இருக்கிறது? இருள் வடிவம் நிழலுக்கு. நிழலை நிஜமென நம்பும் மாயையினால் நாம் குளத்தில் கொக்கைப் போல நம் நிழல் விழ அதைப் பார்த்து மகிழ்கிறோம். ஆனாலும், அந்தத் தவத்திற்குப் பரிசான உணவும் அங்கிருந்துதான் கிடைக்கிறது. நாம் நிழலில் மயங்குவதும், சீராகக் கொத்தி உணவெடுப்பதும் இயற்கை நமக்குக் கொடுத்த விதிமுறைகள். ஆயினும் அந்தக் குளத்தில் நம் நிழல் தெரியும் வரை நாம் இருக்கிறோமே, அதுதான் அழகு. பொற்றாமரைக் குளத்தில் மீன் கிடையாது; கொக்கு அங்கே தவமிருக்காது. ஆயினும், அதன் பரப்பில் நம்மழகு தெரிவதே போதுமெனத் தோன்றுகிறது கவிஞருக்கு. இருத்தலியல் சிக்கல்களில், சுயம் என்பதை, இருப்பே காட்டும் என்பது இந்தக் கவிதையின் தத்துவம் என எனக்குத் தோன்றுகிறது. யாரும் பார்ப்பதற்கு இல்லாவிட்டால் வானம் நீலமாக இருக்குமா என்பது ஆதி சங்கரரின் அற்புதக் கேள்வி. இங்கே பிச்சமூர்த்தி நிழல் என்று குறிப்பிடுவது ‘ஷெல்டர்’ இல்லை, அது ‘ஷேடோ’