இலக்கிய இன்பம் 63/கோவை எழிலன்

முல்லைக் கிழத்தி

பெருங்கதைக் காப்பியத்தில் முல்லை நிலமே கணவனின் வரவு எதிர் நோக்கி இருக்கும் ஒரு பெண்ணாக உருவகிக்கப் படுகிறாள்.

கார்காலம் என்னும் கணவனைப் பிரிந்த பெண்ணாக முல்லை நிலம் கிடக்கிறது. பொருள் தேடிச் சென்ற தலைவன் போல் கடலில் நீர் முகந்து கொண்டு வந்த கார்காலம் என்னும் தலைவன் பிரிந்த தலைவியின் நெஞ்சகக் குமுறலைப் போல் இடித்து கணவன்(மழை) இன்றி வாடிய அவள் மேனி நலம் பெற வானத்தில் கருநிறப் பந்தல் கட்டி வானவில் தோரணங்களை இட்டு மின்னல் என்னும் விளக்குகளால் அலங்கரிக்கிறான். பின் இடி என்னும் முரசம் அதிர அவளின் உடலும் உள்ளமும் குளிர நீராட்டுகிறான்.

உஞ்சைக் காண்டத்தில் வரும் அப்பாடலடிகள் இங்கே

“பொருள்வயிற் பிரிவோர் வரவுஎதிர் ஏற்கும்
கற்புடை மாதரின் கதுமென உரறி
முற்றுநீர் வையகம் முழுதும் உவப்பக்
கருவி மாமழை பருவமொடு எதிரப்
பரவைப் பௌவம் பருகுபு நிமிர்ந்து
கொண்மூ விதானம் தண்ணிதின் கோலித்
திருவில் தாமம் உருவுபட நாற்றி
விடுசுடர் மின்னொளி விளக்கம் மாட்டி
ஆலி வெண்மணல் அணிபெறத் தூஉய்க்
கோல வனப்பின் கோடணை போக்கி
அதிர்குரல் முரசின் அதிர்தல் ஆனாது
தூநிறத் தண்டுளி தானின்று சொரிந்து
வேனில் தாங்கி மேனி வாடிய
மண்ணக மடந்தையை மண்ணு நீராட்டி
முல்லைக் கிழத்தி முன்னருள் எதிர”