சாட்சி/வளவ.துரையன்

(18-11-22 கவிதை நேசிப்போம் நிகழ்ச்சியில் வாசித்த கவிதை)

அந்த இனிய மாலையில்
நன்றாகப் புரிந்துவிட்ட
நல்ல நவீனகவிதைபோல்
தென்றல் வீசிக்கொண்டிருந்தது

பேரறிவாளன் திருவாக
ஊருணியும் நிரம்பியிருந்தது
போதும் எனும் மனமிருப்போர்
நீர் மொண்டு சென்றுவிட்டனர்

அணிலாடு முன்றிலாய்
திருவிழாமுடிந்த திடலாய்
குளக்கரை அமைதியை
விழுங்கிக்கொண்டிருந்தது

தண்ணீருடன் மௌனமொழி
பேசமுனைவதுபோல்
அதைத்தொட்டுக்கொண்டு
கனத்த ஒரு குறுநாவலாய்க்
கிடந்த பாறைமீது
உனக்காகக் காத்திருந்தேன்

வாராதுவந்த மாமணியாய்
வந்துதித்த நீயும்
என்னுரைக்கு வாய்ப்பின்றி
முன்னுரையாய் முத்தமீந்து
அணிந்துரையை அரங்கேற்றி
அரவணைத்துக் கலந்தாய்

வாக்குறுதிகள் பல அளித்து
மனவாக்குகளுடன் சென்றாய்
பதிப்பகத்தில்மாட்டிக்கொண்ட
கவிதைநூல் வருமாஎனத்
தெரியாததுபோல் காத்திருக்கிறேன்

பாறையின் அடியிலிருந்து
தலைநீட்டிப் பார்த்திருந்த
தண்ணீர்ப் பாம்பின்று
சாட்சி சொல்ல வருமா?