(18/11/22 அன்று விருட்சம் கவிதைகள் கூடுகையில் படித்த கவிதை)

தற்செயலாகத்தான் சந்தித்தோம்
எதற்கும் ஒரு வணக்கம்
போட்டு வைக்கலாமென
நான் தீர்மானிப்பதற்குள்
‘வாழ்க’ என்றான் அவன்.
நன்றாகப் பார்த்தேன்
வியர்த்தேன்,நடுங்கினேன்
குனித்த புருவமும்,கோவைச் செவ்வாயில்
குமிண் சிரிப்பும்,பவழம் போல் மேனியில்
பால் வெண்ணீறும்….சிலிர்த்து அழுதேன்
கனவா என்றும் ஐயமுற்றேன்
‘கிள்ளிப் பாரேன்’ என்றான் அவன்
வலித்தது. அவனைக் கிள்ளப் போனேன்.
*புதுமைப் பித்தன் தன் கைகளைத் தடவி
முறைத்தார் என்னை; சிரித்தார் பின்னர்
‘அவனுடைய கனவு’ என்றார். பிறகு
ஏனோ இருவருமில்லை.
(*கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்பதற்காக அவரது பெயர்.)
