
கலகலென, ஜிலுஜிலென
வார்த்தைகளை உதிர்த்துச்
சிந்தனைகளைத் தொட்டு எழுப்பிய
அவர் வாயை மூடிவிட்டார்.
விந்தைப் பேச்சை
விடியும் வரை பேசும்
அவர் தொண்டை
வற்றிவிட்டது.
உதடுகள் அசைய மறுக்கின்றன.
கலையுள்ளம் சொட்டும் வார்த்தைகள்
தொனிக்க மறுக்கின்றன.
கேட்கக் கேட்கத் திகட்டாத
கிளை கிளையாக ஞானக்கிளைகள் துளிர்த்த
புல்லிதழிலிருந்து புல்லிதழுக்குத் தாவும்
சிந்தனை வெட்டுக்கிளி
ஓய்ந்துவிட்டது.
கோத்த வார்த்தைகள்
கவிதையென
அழகென
ஓங்கு சிந்தனைகளென
எடுத்து வீசிய
அவர் மனம் உறங்கிவிட்டது.
