மனிதக் காகம் /வைதீஸ்வரன்

             அந்த   பார்க்கில்  நீளமான  சிமெண்ட்  பெஞ்சின்  ஒரு            
    ஓரமாக  நான்  உட்கார்ந்தேன்.  உட்கார்ந்த பிற்கு  தான்  நான்  அந்தக்   காகத்தைப்  பார்த்தேன்.  பெஞ்சின்  மறு  முனையின்  கைப்பிடி  மேல்  அது  உட்கார்ந்திருந்தது.  

          நான்  உட்காருவதைப் பார்த்த பின்னாவது  அது  பறந்து  போயிருக்க  வேண்டும்.  என்னைப்  பார்த்து  அது  ஏன்  பயப்படவில்லை.?  நான்  ஒன்றும் பெரிய  மகரிஷியல்ல. ..மற்ற  ஜீவ ராசிகள்  என்னை  வித்யாசமாகப்  பார்க்காமல்  தங்களின்  ரட்சகனாக  எண்ணிக்  கொள்ள!....

  நான்  சற்று  நேரம்  அதையே  பார்த்த வண்ணம்  இருந்தேன்...

லேசாகக் கைகளை அசைத்துப் பார்த்தேன். கொஞ்சம் நெருங்கி உட்காருவது போல் சற்று நகர்ந்தேன்.. காகம் சற்றே தலையை அசைத்ததே தவிர எனக்கு பயந்து கொண்டு பறந்து போகவில்லை.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் ஒரு காகத்துடன் அவ்வாறு தனியாக அமர்ந்திருப்பது எனக்கே கொஞ்சம் அசௌகரியமாக நிம்மதியில்லாமல் இருந்தது.

  ஒரு  காகம்  என்னைப்  பார்த்து  பயப்பட  வேண்டும்.  அது  தான்  இயல்பு.  அப்படி  நேராததற்கு  ஒரு  காரணம்  அது  குருடாக  தன்  பார்வையை  இழந்த கிழக்காகமாக  இருக்கலாம்.  இந்த  நிலைமையில்  அது  அதிக  நாட்கள்  ஜீவித்திருப்பது  கூட  அசாத்தியம்.  பயப்படுவதை  மறந்த  அது  தன்னை  தற்காத்துக்  கொள்ள  இயலாத  அந்த  ஊனமுற்ற  காகத்தை  பார்த்து  எனக்கு  பரிதாபமாக  இருந்தது.  
என்னிடம்  வேர்க்கடலை  பொட்டலம்  இருந்தது.  சில  கடலைகளை  அதன்  அருகில்  அறிந்தேன்.  அது  எப்படியோ  வேர்க்கடலை  அருகில்  விழுந்ததை  உணர்ந்து  அலகால்  கொத்தி  சாப்பிட்டது.

எனக்கு சந்தோஷமாக இருந்தது.

மேலும் கொஞ்சம் வேர்க்கடலைகளை பரிவோடு அதனிடம் வைத்தேன். அவற்றையும் அது தின்றது. அந்த உதவியற்ற பறவையை எப்படிக் காப்பாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். விருட்டென்று சப்தம் கேட்டது. நான் சரியாகப் பார்ப்பதற்குள் காகம் பறந்து போய் உச்சிக் கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது

  என்னை  ஏய்த்து  விட்டது  போல்  இறக்கைகளை  அடித்துக்  கொண்டு  கரைந்தது.   என்  தலையை  சுற்றி  வட்டமிட்டது.

      என்னால்  நம்ப  முடியவில்லை. 

  ஒரு  காகம் எப்படி  மனிதனைப்  போல  வாழக்  கற்றுக்  கொண்டது???

                                                                   *******