
அம்மா இருந்தவீடு ஏலத்திற்கு
வந்துவிட்டது…
காரணங்கள் எதிர் எதிர்க் குற்றச்சாட்டுகளாய் நீண்டபோதும்
தீர்வு கிடைக்கவில்லை.
அம்மா இறந்தபோது அவள் நகைகளுக்காக அண்ணிமார்களும் …அக்காமார்களும் அடித்துக்கொண்டது…உறவுகளால் இன்றும் பேசும் கதையாகவே இருக்கிறது.
அம்மாவின் விருப்பப்படி ஆசையாய்க் கட்டியவீடு …அடமானமாய் வங்கியில் இருந்ததுதான் அதிகம்.
இப்போது ஏலம் விட்டு மீந்துபோய்க் கிடைக்கும் தொகைக்காக ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது…
எனக்கு அம்மா படுத்திருந்த இரும்புக்கட்டில் வேண்டும்…
அதில் படுத்தால் அவள் மடியில்
படுத்த உணர்வு எழும் வாஞ்சையாய்….
யாரும் அதில் பங்கிற்கு வந்துவிடக்கூடாதுயென்று …அம்மாவைத்தான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
