காந்தாரா – வெறும் கந்தல்றா!/முத்துக்குமார்

காந்தாராவின் வெற்றி உண்மையில் ஒருபுறம்அதிசயிக்க வைத்தாலும் இந்தப் படம் பேசும் கருத்தியத்தை நோக்குகையில் அந்த ஆச்சரியமும் மறைந்து விடுகிறது.நடப்பு சமூக/பண்பாட்டு/அரசியல் சூழலில் காந்தாரா போன்ற படங்கள் வெற்றி பெறுவது ஒன்றும் அதிசயமல்ல. ஏனெனில் மிகவும் சாதாரணமான ஒரு படம். அதில் சொல்லப்படும் தொன்மம் சினிமா தொன்மம்; உண்மையான தொன்மமாக இருக்க வேண்டியதில்லை.

பொதுவாக வரலாறை சாதாரணமாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிவது என்ன? நிலச்சுவான்தார்கள் ஏழைகளின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை காலங்காலமாகக் கொத்தடிமைகளாக வைத்திருப்பார்கள். நிலச்சுவான்தார்களுக்கு அரசு-போலீஸ் படை உதவிகரமாக இருக்கும் ஸ்டேட்-போலீஸ்-ஜமீந்தார் கூட்டிணைவு அல்லது ஸ்டேட்-போலீஸ்-அடியாட் படை- ஜமீன்தார் என்றுதான் பிணைப்பு இருக்கும் இவர்கள் ஏழை மக்களை, பரிதாபப் பழங்குடிகளை சுரண்டி, நசுக்குவார்கள். சுரண்டப்படுபவர்கள் ஒரு கட்டத்தில் எழுச்சி பெறுவார்கள், போராட்டம் செய்வார்கள், ரத்தக்களறி, சாவு, கடும் சிறை, துன்பம், துயரம் இதுதானே வரலாற்றில் நமக்கு தெரியவருகிறது. ஏன் போராட்டம் நடத்தினால் அரசு என்ன செய்யும் போலீஸ் என்ன செய்யும் என்பதை நடப்பு அரசியலிலும் பார்க்கத்தானே செய்கிறோம். மாற்றம் என்ற ஒன்று நடந்தால் அது நிலபிரபுத்துவத்தை, முதலாளிய/முதலீட்டியத்தை அதன் அடக்குமுறை அரசை, அரசியலை எதிர்க்கும் போராட்டம் மூலமாக நிகழ்வதுதான் என்பது சமூகவரலாற்றின் பாலபாடம்.

இந்தப் படத்தில் போலீஸ் அதாவது ஸ்டேட் மக்கள் பக்கம் நிற்கும். ஜமீன்தார் பழங்குடிகளின் தொன்மத்தை நம்பாத பகுத்தறிவு பேசும் ஒரு சுரண்டல்வாதியாகி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பறிப்பார். ஹீரோ விடுவிப்பார். நவீன அரசுகாள் என்ன செய்கின்றனர்? பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார சூழல்களிலிருந்து விரட்டி விட்டு நிலங்களை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கின்றனர். அல்லது அரசே ‘வளர்ச்சிப் பணி’, ‘விரிவாக்கப் பணி’ என்று ஏழை விவசாயிகள் நிலத்தையும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தையும் பிடுங்குவதில் ஈடுபடுவதைத்தான் நாம் பார்க்கிறோம். இங்குதான் நடப்பு ஆட்சியின் பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஐடியாலஜி இந்தப் படத்தில் மிக மிக நுட்பமாக, சூக்குமமாகப் புகுத்தப்பட்டுள்ளது. அதாவது அரசு-ஜமீன்தார்- உயர்சாதி-மேட்டுக்குடி என்ற அதிகார வலைப்பின்னலைத் தலைகீழாக்கி ஜமீன்தார்- ஆண்டான் பரம்பரை- தொன்ம எதிர்ப்பு-குண்டாஸ் என்ற வலைப்பின்னல் ஒருபுறமும் மக்கள்-போலீஸ்-ஸ்டேட்- தொன்ம ஆதரவு- நிலத்தை மீட்டுத் தருதல் என்பதை எதிர்நிலையிலும் வைத்து ஏமாற்றுகிறது காந்தாரா.

பழங்குடி மக்களின் நிலங்களை அரசு பாதுகாக்குமாம், போலீஸ், காட்டிலாக்கா அதிகாரிகள் மக்கள் பக்கம் நிற்பார்களாம் நிலச்சுவான்தாருக்கு எதிராக! அதிகாரம் மக்கள், பழங்குடி மக்கள் பக்கம் நிற்குமாம்.மாறாக ஜமீன்தார் தொன்மங்களை நம்ப மாட்டாராம், பழங்குடியினரின் சிறுதெய்வ நம்பிக்கையை எள்ளி நகையாடுவாராம், சிறுதெய்வத்தின் பூசாரியாக வருபவரை அந்தத் தெய்வத்தின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ள மாட்டாராம். அவரையே கொல்பவராம்! முர்முவை ஜனாதிபதியாக்கியதன் மூலம் பாஜக தான் பழங்குடிகளையும் உயரத்திற்குக் கொண்டு செல்கிறேன் பார் என்று ஒரு அல்வாவைக் கொடுக்கிறது பாருங்கள் அதே அல்வாவைத்தான் இந்தப் படமும் அரசின், போலீஸின் தொன்ம-பழங்குடி மக்களின் ஆதரவு என்று கொடுக்கிறது. பழங்குடிகளின் தொன்மங்களையும் நிலங்களையும் அரசு காக்குமாம்! நம்பிக்கையற்றவர் சுரண்டல்வாதி, நாஸ்திகர் அடக்குமுறை செய்பவர் என்பதோடு இவர் மன்னர் பரம்பரையில் வந்த ஜமீந்தாருமாம். மாறாக இந்துத்துவ நம்பிக்கை/ அரசியல் கொண்டவர்கள் ஆத்திகர்கள் இவர்கள் மக்களைக் காப்பவர்களாம் குறிப்பாக பழங்குடிகளையும் அவர்களது மரபுகளையும், தொன்மங்களையும் நிலங்களையும் காப்பவர்களாம்! இதுதான் காந்தாராவில் இழையோடும் கலையல்ல, கருத்தியம். மிகவும் பொய்யான, தவறான அரசியலை அல்லது அரசியலழிப்பை, அல்-அரசியலை நெய் தடவி கொடுத்துள்ளது காந்தாரா! ஆனால் அது நெய் அல்ல வெறும் டால்டா! one more counter-revolutionary film.