பயணம் …. இனிதாகட்டும்/க.யாஸ்மின் சல்மா

தொட்டு விடும் தூரமென தொடங்கிய
நம் தொலைதூரப் பயணம்
தொடக்கத்தின் தடுமாற்றத்தில்
வழிகாட்டிய வழிபோக்கரும், பலகைகளும்!
சோர்வுற்ற வேளையிலே ஊக்கம் தந்த
நண்பர்களும், தேனீர் விடுதிகளும்!
நம் வேகத்தை விவேகப் படுத்திய
வார்த்தைகளும், வேகத்தடைகளும்!
அலுப்புத் தெரியாமல், வலுக்கிப்போன சாலைகளும்
பட்டென கடந்து போன வருடங்களும், மைல் கற்களும்!
கடந்து வந்த பாதையின் கடினமது மனதில் இல்லை
கற்றுவந்த பாடங்களும், கற்றுத்தந்த மனிதர்களும்
இன்னும் மனதைவிட்டு அகலவில்லை!
வளைவுக்குப் பின்னே வாழ்க்கை காத்துக் கிடக்கிறது
வளமோடும், வெளிச்சத்தோடும்!
மிச்சமுள்ள வாழ்க்கையில் நாளையும்
நீளும் இதமாக இப்பயணம், இனிதாகட்டும்!