
–இராய செல்லப்பா
***
சம்பவ தினத்தன்று மிகுந்த தயக்கத்தோடு தன் மனைவியிடம் அவளுடைய காரை இரவல் கேட்கிறார் பரமேஸ்வரன். அவள் ஆசை ஆசையாக வாங்கிய பென்ட்லீ கார் அது. இரண்டரை லட்சம் டாலர்.
பழைய மருந்துக் கடையை மூடிவிட்டு புதிய மருந்து கடையை அவர்கள் தொடங்க இருந்த சமயம் அது. திறமையான பெயிண்ட்டரை அழைத்துக்கொண்டுபோய் கடைக்கு தான் சொன்ன நிறத்தில் பெயிண்ட் அடிக்கும்படி மனைவி கட்டளையிடுகிறார்.
பரமேஸ்வரன் பழைய கடைக்குப் போன போது அவரது நண்பர் அனுப்பியதாக ஒரு பெயிண்ட்டர் வருகிறான். பெயர் மூசா. வெறும் எலும்பாக இருந்தான் அவன். “முக்கோணங்களினால் ஆன உடம்பு” என்கிறார் ஆசிரியர். நாற்றம் அடித்த அழுக்கான உடை.
தன்னுடைய உணவு பாக்கெட்டில் இருந்து ஒரு சதுர ரொட்டியை அவனுக்குக் கொடுக்கிறார் பரமேஸ்வரன். இரண்டு நாள் பட்டினி ஆனவன், அதை இழுத்து இரட்டிப்பாகி, விரைவாகத் தின்று தீர்க்கிறான். இப்போது அவனைப் புதுக் கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும், அதுவும் மனைவியின் புத்தம்புது பெண்ட்லி காரில். அவளுக்கு தெரிந்தால் உயிரையே விட்டு விடுவாள்.
மருந்துகளைச் சுற்றிவரும் பிளாஸ்டிக் காகிதத்தை பின்சீட்டில் பரப்பி அதன் மீது அவன் அமரும்படி செய்கிறார். ஓர் அழுக்கான மூட்டையுடன் காரில் ஏறுகிறான். அது அவன் தொழில் செய்யும் போது அணியும் ஆடையாம்.
அதை அணியாவிட்டால் அவனுடைய நல்ல ஆடை கெட்டுப் போய்விடுமாம். அப்போது அவன் அணிந்திருந்த ஆடையை விடவும் ஊத்தையான ஆடை இருக்கமுடியுமா என்கிறார் ஆசிரியர். மூசா வெகு ஜாக்கிரதையாக காரின் பின்சீட்டிலோ அல்லது பக்கவாட்டிலோ உடம்பு பட்டுவிடாதபடி ஒடுங்கிக் கொண்டு உட்கார்ந்தான்.
பரமேஸ்வரன் மனைவியின் புதிய காரை ஓட்டுகிறார் அதுவரை அவர் ஓட்டியதில்லை. வழுக்கிக்கொண்டு ஓடியது. அற்புதமான அனுபவம். அந்த சந்தோஷத்தோடு மூசாவின் வரலாற்றை வினவுகிறார். தனது ருவாண்டா நாட்டில் சர்வாதிகாரியின் 100 நாள் ஆட்சியில் அவனுடைய இனத்தைச் சார்ந்த 8 லட்சம் பேர் கொல்லப்படவே, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 12 மணிநேரம் கடலில் நீந்தி காங்கோ நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து புகலிடம் தேடித் கள்ளத்தனமாக கனடாவுக்கு வந்தவன். 13 வருடங்கள் ஆகிறது.
தான் ஒரு பராமரிப்பு கம்பெனியைச் சேர்ந்தவன் என்று பொய் சொல்லி அவரிடம் வந்ததைச் சொல்கிறான். அகதிக்கான அவனது மேல் முறையீடும் தோல்வியானதால், நாடுகடத்த போலீஸ் அவனைத் தேடுகிறது. “என் பசியைப் போக்க இந்த வேலை வேண்டும். மன்னித்து விடுங்கள்” என்கிறான்.
மனைவியை நினைத்து அவருக்கு அச்சம் உண்டாகிறது. அதேசமயம் மூளையில் எதிர்பாராத விதமாக மின்னல் போல ஒரு யோசனை உதிக்கிறது “மனைவியைக் கலந்தாலோசித்து மீண்டும் அழைக்கிறேன். அது வரை இரண்டு நாளைக்கு முழு சம்பளம் இந்தா” என்று சொல்ல நினைக்கிறார்.
அதற்குள் காரின் பின் சீட்டில் கர்புர் என்று சத்தம், பற்கள் கடிபடும் சத்தம். மூசா கதவை உதைத்தான். பின்னர் வளைந்து காலால் கூரையில் ஓர் உதை விட்டான். உடல் முறுகி எழுவதும் விழுவதுமாக இருந்தது. அதாவது வலிப்பினால் துடித்துக் கொண்டிருக்கிறான். நாக்கு தொண்டையில் உள்ளே போனால் இறந்துவிடுவான்.
காரை ஓரமாக நிறுத்தினார். மூசா அச்சத்துடன் ‘ஆம்புலன்ஸ் வேண்டாம், ஆஸ்பத்திரிக்கும் போக வேண்டாம்’ என்கிறான். சாதாரண வலிப்புதான், அடிக்கடி வரும் போகும், ஆஸ்பத்திரிக்குப் போனால் உடனே நாடு கடத்தி விடுவார்கள் என்கிறான்.
கதவைத் திறந்து பார்த்தால், வாந்தி எடுத்து அதன் மேலேயே உட்கார்ந்திருந்தான் மூசா. குமட்டியது. காரின் கூரையில் அவனது கால்தடம் கருப்பாகப் பதிந்திருந்தது. மனைவியை நினைத்து நடுங்கினார் பரமேஸ்வரன்.
ஒரு காப்பி கடையின் அருகே வண்டியை நிறுத்தினார். அதேசமயம் விளக்குக் கம்பத்தின் கீழே நிறுத்தாதீர்கள் புறாக்கள் வந்து எச்சமிடும் என்று மனைவி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. மூசாவை கழிப்பறைக்குப் போய்த் தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வரச் சொன்னார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அதேசமயம் மூசா, “என்னால் ஒரு பிரச்சினையும் வராது, பூச்சு வேலைக்கு ஐந்து நாள் தேவை, அதில் ஒரு நாளைக்கு எனக்கு சம்பளம் வேண்டாம்” என்று பெருந்தன்மையாகக் கூறுகிறான்.
இருவரும் காபி அருந்தி விட்டு வெளியில் வந்தால் காரைக் காணோம். காரணம் ‘இங்கு நிறுத்தக் கூடாது’ என்ற இடத்தில் அவர் காரை நிறுத்தி இருக்கிறார். 320 டாலர் அபராதம் பெற்றுக்கொண்டு காரை விடுவித்த பெண்மணி, அகமகிழ்ந்து சொல்கிறாள்: “நாங்கள் தூக்கி வந்த முதல் பெண்ட்லி கார் இதுதான்” என்று!
கார் நெடுஞ்சாலைக்கு வருகிறது. வலிப்பு வரும் முன்பு ஏதேனும் அறிகுறிகள் தெரியுமா என்று கேட்கிறார் பரமேஸ்வரன். எந்த மாதத்தில் 2 பவுர்ணமி வருகிறதோ அப்போதெல்லாம் அவனுக்கு வலிப்பு வரும் என்று அம்மா சொன்னாளாம். அந்த ஆண்டு மார்ச்சில் 2 பவுர்ணமி வந்தது, வலிப்பு கொஞ்சம் தள்ளி இப்போது ஏப்ரல் மாதம் வந்திருக்கிறது. “பயந்து விட்டீர்களா?” என்கிறான்.
இனி மனைவி சொன்ன பெயிண்ட்டை சரியான நிறம் பார்த்து வாங்க வேண்டுமே என்று அடுத்த அச்சம் ஏற்படுகிறது பரமேஸ்வரனுக்கு. “வண்டியை பெட்ரோல் ஸ்டேஷனில் நிறுத்துங்கள் ஐயா! அவர்கள் வெளியே கழுவட்டும். நான் உட்புறத்தை சுத்தமாக கழுவி விடுவேன். யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்கிறான்.
அவனுக்குப் பசிக்கிறது. சரி, அவன் காரைக் கழுவியதும் நாலு ரொட்டியும் இரண்டு நாள் சம்பளப் பணத்தையும் கொடுத்து அனுப்பிவிடலாம், மனைவியிடம் எதைச் சொல்வது எதை மறைப்பது என்பதைப் பின்னர் முடிவு செய்யலாம் என்று அவருடைய மூளை சொன்னது.
பெட்ரோல் ஸ்டேஷனுக்குள் வண்டியைத் திருப்பி அவனைப் பார்க்கிறார், பின்சீட்டில் அவனைக் காணோம்! அவசரமாக இறங்கிக் கதவைத் திறந்து பார்த்தால், “அவன் வாய் சற்றுத் திறந்து இருக்கிறது. வாயிலிருந்து நூல் போல நீர் இறங்கி, தாடையைத் தொட்டுக் கொண்டு நின்றது. ஒருவிதமான சத்தத்துடன் மூச்சு ஏறி இறங்கியது.”
முத்துலிங்கத்தின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அனுதாபத்துக்குரிய ஏதிலிகளே. வாசகனின் மனிதாபிமானத்தைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குபவர்களே. மூசாவும் விதிவிலக்கல்ல. உருக்கமான இந்த கடைசி பத்தியுடன் கதையை முடிக்கிறார் முத்துலிங்கம்:
“காரை கழுவிப் புதிது போலாக்கித் தருவதாக உறுதியளித்தவன், ஒரு ரொட்டியை இழுத்துஇழுத்து இரண்டு மடங்காகச் செய்ய முயன்றவன், 12 மணி நேரம் கடலில் நீந்திக் கடந்தவன், ஐந்து நாளில் ஒரு நாளைக்குச் சம்பளம் வேண்டாம் என்று சொன்னவன், எப்பொழுது போலீஸ் பிடித்தாலும் நாடு கடத்தப்படக் கூடியவன்- அந்த மூசா – தன்னை மறந்து ஒரு குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தான்.”
பாவம் அவன் மீண்டும் எழுந்திருக்கும் வரை நம் பரமேஸ்வரனுக்கு அச்சத்தில் இருந்து விடுதலை கிட்டப் போவதில்லை. மனைவிகளை வைத்து மெலிதான நகைச்சுவையை எழுப்புவதில் திறமைபெற்றவர் முத்துலிங்கம் என்பது தெரிந்ததுதானே!
- இராய செல்லப்பா
(விருட்சம் கதை வாசிப்பு – அக்டோபர் 13, 2021)
