கி.பி 9 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரைதமிழ் இலக்கியம்/வாசு தேவன்

…..

சங்க காலத்திற்குப்பிறகு பிற்கால சோழர்கள் ஆட்சியில் தமிழ் இலக்கியம் செழிப்புற்றது. கி.பி.850 இல் விசயாலய சோழன் திருச்சி உறையூரில் பதவி ஏற்கிறான். கி.பி 880 இல் திருப்புறம்பியம் போர் ஒரு திருப்புமுனை. கொள்ளிடக்கரையில் நடந்த இந்தப்போரில் சோழர்கள் பல்லவர்களுடன் கைகோர்த்து வரகுண பாண்டியனை கொன்று சோழ சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிலை நாட்டினர். சோழர்களின் தலைநகரம் தஞ்சாவூருக்கு மாறியது. அதற்குப்பிறகு ஏறத்தாழ 300 ஆண்டுகள் தஞ்சாவூர் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராகவே இருந்தது.
இந்தக் காலத்தில் ஏகப்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள் இயற்றப்பட்டன. ஒரு புறம் சைவ/வைணவ பக்தி இயக்கங்கள் கை ஓங்கினாலும், மறுபுறத்தில் பிற மதங்களும் மக்களிடம் செல்வாக்குடன் இருந்தன. மதபூசல்கள் நடந்தன. இவற்றுக்கிடையில் அபாரமான இலக்கிய ஆக்கங்கள் வெளிவந்தன.

பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், இலக்கண நூல்கள், உரைநூல்கள் இயற்றப்பட்டன. கி.பி 9 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டுகள் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனலாம்.

ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை,குண்டலகேசி, வளையாபதி பிற்கால சோழர் காலத்தில் இயற்றப்பட்டன.( சிலப்பதிகாரம், சீவக‌சிந்தாமணி சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டன). இதில் நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி பவுத்த காப்பியம்.திருத்தக்கத்தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியும், வளையாபதியும் சமண காப்பியங்கள். இதே காலக்கட்டதில்தான் சைவ பெருங்காப்பியம் பெரிய புராணத்தை சேக்கிழார் இயற்றினார். வைணவ பெருங்காப்பியம் ராமாயணத்தை கம்பர் இயற்றினார். நாயன்மார்களும்,ஆழ்வார்களும் சைவ,வைணவ மதத்திற்காக பாடல்களை இயற்றினர். நள வெண்பா, திருவிளையாடல் புராணமும் வெளிவந்தன.

சமண மத சிறுகாப்பியங்கள் சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், நீலகேசி என ஐந்தும் இயற்றப்பட்டன.ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழையும், செயங்கொண்டார் கலிங்கத்துபரணியையும், பொய்யாமொழி புலவர் தஞ்சைவாணன் கோவை நூல்களை இயற்றினர்.

சமண முனிவர் நன்னூல் என்ற இலக்கண நூலை இயற்றினார். சமண முனிவர்களால் நிகண்டுகள் தொகுக்கப்பட்டன.புத்தமித்திரர் வீர சோழியம் என்ற இலக்கண நூலை இயற்றினார். இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், நச்சினார்க்கினியர் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர்.திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், மணக்குடவர் ஆகியோர் பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.

இதே காலக்கடத்தில் ( 9 _ 12 ம் நூற்றாண்டு) பாக்தாத்தில் மட்டும் மிக செழிப்பான சாம்ராஜ்யம் தோன்றியது. அபசித் பாக்தாத்தில் பிருமாண்டமான நூலகத்தை கட்டினார். கிரேக்கம்,லத்தின் மொழியிலிருந்து பல நூல்கள் அரேபிய மொழியாக்கத்தில் வெளிவந்தன. கணிதம், வானவியல்,மருத்துவம், கட்டிடகலை போன்ற பலதுறைகளின் இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களை இயற்றினார்கள். இதே காலக்கட்டத்தில் ஜப்பானில் பல கவிஞர்களும் தோன்றினார்கள். ஆனால் பிற நாடுகளில் மிகவும் பின் தங்கியிருந்தன. ஐரோப்பா கத்தோலிக திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலோ சாக்ஸன் மொழிதான் பேசப்பட்டன. ஆங்கிலம் பிற்காலத்தில்தான் புழக்கத்திற்கு வந்தது. லத்தின் அமெரிக்காவில் பூர்வ குடிமக்கள் வாழ்ந்தார்கள். எழுத்தறிவு இல்லை. அப்போது அமெரிக்கா என்ற நாடே கண்டுபிடிக்கவில்லை.

வட இந்தியாவில், கர்நாடாகவை சாளுக்கிய வம்சம் ஆண்டது. மஹாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரகுடா வம்சம், பெங்காலில் புத்த சாம்ராஜ்யம் பாலா, மத்திய இந்தியாவில் கலாசூரி வம்சம் போன்றவர்கள் ஆட்சி புரிந்தார்கள். பெரும்பாலும் வட இந்தியாவில் சிற்பக்கலை கோலோச்சியது. பக்தி இயக்கமும் வட இந்தியாவில் பரவி கபீர், மீரா துளசிதாஸ், துக்காராம் பல பாடல்களை இயற்றினர்.

ஆனால் கி.பி 9 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை தமிழில் வெளிவந்த காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உலா, பரணி, உரை நூல்கள் போல் வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை. உலகில் எந்த மொழியிலும் நடக்காதது வியப்பளிக்கிறது. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் இது.