நடுச்சாலையில் ஒரு யானையின் மரணம் /அனங்கன்

எந்தக்காட்டில் பிறந்தாய் என்பது
உனக்குத்தெரியாது….
காடு உன்நினைப்பில் வந்துபோகும் கனவை பிறருக்கு
உணர்த்திடமுடியாது.

உனக்கொரு பெயரை வைத்துக்
கூப்பிடும் காரண அடைமொழி புரியாது.
உந்தன் காலின் கொலுசின் ஓசை
உன்விருப்பத்தில் கிடையாது.

நாளும் பொழுதும் ஆசிவழங்கிட
நின்றாய் சலியாது…
உனக்கொரு இணையை நினைத்திருப்பாயா சொல்லவும்
முடியாது….

ஒரு யானையின் மரணம் நடுச்சாலையில்
நடந்தது இதுவரையாரும் கண்டது
கிடையாது….
விதியா…சதியா என்பதைச் சொல்ல அரசால் முடியாது.

மதத்தின் பெயரால் விலங்கை
வதைக்கும் கொடுமைக்கு முடிவேது….
கடவுள் வந்து பேசும் வரைக்கும்
எந்தக்காட்சியும் மாறாது.