
ஆதிசேஷன் அன்று
தோள் மாற்றினான்
பள்ளிச்சிறுவர்கள்
பயந்து
தங்கள் உபாத்தியாயரைச் சூழ்ந்து
ஒதுங்கி நின்றனர்
உரிச்சொல் காணும்
உபாத்தியாயர்
ஆதிசேஷனை அடக்கி ஆளுவார்
என்பது அவர்கள் நினைப்பு.
ஆண்டுவிட்டார் என்று
அவர்கள் கண்டனர் –
இடம் பெயராது
பையன்களை அவர்
அணைத்து நின்றார்.
மற்றொரு நாள்
பள்ளிக் கடுத்த
குடிசை வரிசையிலே
தீப்பற்றிக் கொண்டது.
இது வேறு ஒரு ஆதிசேஷன் –
தீக்கரங்கள் மூலைகளில்
வளைந்து உயர்ந்தன.
பையன்களை வரிசைப்படுத்தி
கிணற்றில் நீர் எடுத்து
பக்கெட் பக்கெட்டாகக் கொட்டி
தீப்படை வருமுன்
அணைத்து விட்டார்.
பலநாள்
முகத்தில் கரி வழிய
மூக்கில் தீப்பட்டபுண்
வடுக்காட்ட
பையன்கள் அதுபற்றியே
பேசிக் கொண்டிருந்தனர்.
இன்று உபாத்தியாயர்
வகுப்பில் வினைச் சொல்லும்
செயப்படுபொருளும் பேசும்போது
பையன்கள் ஜன்னல் வழியாக
வெளியே பார்வையை வீசிக்
காத்திருந்தனர் –
வீடு பற்றி எரியாதா
வெள்ளம் வராதா
ஆதிசேஷன் மீண்டும்
தோள்மாற்ற மாட்டானா
என்று.
