
மண்சுவரும் சட்டமும் /நாகேந்திர பாரதி
கருப்பட்டித் தோசை சுட்டு தட்டில் வைத்து
கணக்கின்றி வயிற்றுக்குள் போன காலம்
தெருச்சுற்றி விளையாடித் திரும்பி வந்து
தேர்வுக்குத் திரிவிளக்கில் படித்த கோலம்
முளைக்கொட்டு உற்சவத்தில் படைய லிட்டு
முந்தானை வரிந்துகட்டி கும்மித் தாளம்
விளக்கிட்டு அம்மனுக்கு வேண்டி விட்டு
வீட்டுக்கு வீடுவரும் உறவுப் பாலம்
விதையிட்டு களைவெட்டி மடையை விட்டு
வரும்நீரில் பயிர்வளரும் வர்ண ஜாலம்
அதையொட்டி எங்கிருந்தோ ஆசைப் பட்டு
ஆடியாடி வந்தமரும் கொக்கின் நீளம்
அறுவடையில் வைக்கோலில் படப்புப் போட்டு
அடித்துதிரும் நெல்மணியின் சலங்கைச் சத்தம்
மறுபடியும் மாட்டுக்கு வண்டி பூட்டி
மருதைக்குச் செல்வதற்கு மூட்டை மொத்தம்
கிராமத்தில் வாழ்ந்திருந்து மறந்து விட்டு
கீழ்மேலாய் மாறினாலும் மனம் திறக்கும்
மராமத்து பார்க்கின்ற பழைய வீட்டின்
மண்சுவரும் சட்டமுமாய் மொற மொறக்கும்
