
இந்த வேதாளம்
என்னை விடவே விடாது
புலி வாலைப் பிடித்த
கதை தான்
மாடிப்படி ஏறுகிறேன்
வேதாளம் என்னைப்
பின் தொடர்கிறது
ஊஞ்சலில் அமர்கிறேன்
வேதாளமே ஆட்டிவிடுகிறது
உறங்குகிறேன் வேதாளம்
வேடிக்கைப் பார்க்கிறது
எனக்கு பிரைவசி என்ற ஒன்று
இல்லாமலேயே போய்விட்டது
எனது அந்தரங்க ரகசியத்தை
வேதாளம் தெரிந்துகொண்டுவிட்டது
தனியுரிமையை இழந்தவன்
செத்த மனிதன் தான்
ஏற்கனவே செத்தவன்
திரும்பவும் சாகமுடியுமா
என்று கேட்கிறது
இது விக்கிரமாதித்தன் வேதாளமல்ல
முருங்கை மரம் தாவ
கேள்விக்கு விடை தெரியாததால்
தோளில் சுமந்து தானே
ஆக வேண்டும்
எனக்கு அலுத்து விட்டது
கதை மீது ஆர்வமுள்ளவர்கள்
கூறுங்கள்
வேதாளத்தை அனுப்பிவைக்கிறேன்
