
நண்பா!
உன்னைப் பர்த்தால் எனக்குப்
பொறாமையாக இருக்கிறது
தேதி பத்தாயிற்றே
இம்மாதம் யாரையாவது அழைத்துக்.
கூட்டம் நடத்த வேண்டுமே
அந்தச் சிற்றிதழிற்குப்
படைப்பு கேட்டார்களே
கதையோ கவிதையோ
உடனே அனுப்ப வேண்டுமே
நாளைக்கு இரண்டு கூட்டங்கள்
இருக்கின்றனவே
எதற்குப் போவது? எதைத் தவிர்ப்பது?
இம்மாத இதழ் இன்னும்
அச்சகத்திலிருந்து வரவில்லையே
நெருக்கம் அளித்து
வாங்கிவந்து அனுப்ப வேண்டுமே
போன மாதத்தோடு
முடிவுற்ற இதழ்களுக்குச்
சந்தா அனுப்ப வேண்டுமே
எனும் கவலைகளெல்லாம் இல்லை.
உனக்கோ
நேரத்தோடு அலுவலகம் போய்
வருகைப் பதிவேடும்
ஊதியப் பதிவேடும்
முக்கியமென எண்ணிப்
பிள்ளைகளைப் படிக்க வைத்து
வீட்டிற்குக் காய்கறிகள்
மளிகை வாங்கிப் போட்டு
மாதக்கடைசியில் வரும்
செலவுகளைச் சமாளித்து
வாழவேண்டும் என்பதுதான் கவலை
எனக்கும் இவை உண்டு
ஆனால்
எனது கூடுதல் கவலைகள்
உனக்கு இல்லையே;
அதனால்தான்
உன்னைப் பார்த்தால்
எனக்குப் பொறாமையாக இருக்கிறது.
