மரணத்தில் வாழ்கிறோம்/வே.கல்யாணகுமார்

இதயம் இருக்கிறது எங்களுக்கும்..
இருப்பினும் எவர் இறந்தாலும்
அழுவதில்லை நாங்கள்!

அடுத்தடுத்து வேலையுண்டு..
பல காரியங்கள் உண்டு!
ஏன் சில காரணமும் உண்டு!

எரியூட்டல்.. புதைத்தல்.. கல்லறை கட்டுதல்..
எங்களின் வேலை!
எங்கள் இருப்பிடம் கல்லறைத் தோட்டம்..

சாவு மேளம்.. தூரத்தில் கேட்டால்..
மனம் தானாக ஆடும்..
சவ ஊரவலம் வருவது தெரிந்தால்..
கண்கள் மின்னல் வந்தே போகும்..
பிணங்கள் எரியும்..
எங்கள் குடிசையுள் அடுப்பும் எரியும்!

படையல் துணிகள் பட்டாய் தெரியும்!
பசித்தால் புரியும்..
எங்களின் ஏக்கம்..
தினசரி வேலை! எரிப்பு.. புதைப்பு..
இரண்டில் ஒன்று!
ஒன்றுக்கு மேல் வந்தால் நன்று நன்று..

செல்லப்பறவைகள் கழுகுகள் எமக்கு!
ஊட்டி வளர்ப்பது நாய்கள் போதும்..
பிள்ளைகள் உதவா..

ஏதோ இருக்கும் வரை தினசரி
சடலம் வரவேண்டும் சாமி!
எங்கள் வீட்டிலும் அடுப்பு
எரியனுமே சாமி.!

மரணத்தில் பிழைக்கிறோம்..
மனம் நோகும் குடிக்குறோம்..
வேறென்ன சொல்வது சாமி!