இந்த அனுபவம் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஏற்பட்டது../பா.சத்தியமோகன்

அகந்தை அகன்ற அனுபவம் அவருக்குக் கிடைக்கும் போது அவரது வயது பதின்மூன்று.

அவர் வயலில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தந்தை ஏழை. தந்தை ஏழை. அவர்கள் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் தான் குடியிருந்தார்கள்.

அன்று வீட்டுக்குத் திரும்பி வரும் போது, ஒரு பெரிய குளத்தின் வழியாக வந்தார் அவர். அது ஓர் அமைதியான மாலைப் பொழுது. குளத்தில் யாரும் இல்லை. ராமகிருஷ்ணர் மட்டும் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். குளக்கரையில் கொக்குகள் கூட்டமாக அமர்ந்திருந்தன.

திடீரென்று எல்லாக் கொக்குகளும் ஒரு சேர அந்த இடத்தை விட்டுப் பறக்க ஆரம்பித்தன. சூரியன் மறைந்து கொண்டிருந்தது.

கறுப்பு நிற வானம் வெல்வெட்டாகப் பளபளத்துக் கொண்டிருந்தது. அதன் பின்னணியில் வெள்ளி மின்னலைப் போல் பறக்கும் வெள்ளைக் கொக்குகள். அது ஓர் உன்னதமான நொடி.

ராமகிருஷ்ணர் தரையில் விழுந்தார். அந்த அழகு அவரை அப்படியே ஆட்கொண்டு விட்டது. அவர் தன்னுணர்வை இழந்தார் .

ஒரு மணி நேரம் கழித்து அந்த வழியே போனவர்கள் அவர் குளக்கரையில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்தார்கள்.

அவரை அவர் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். ஆறு மணி நேரம் கழித்துத்தான் அவருக்கு உணர்வு திரும்பியது.

உணர்வு திரும்பியவுடன் ராமகிருஷ்ணர் அழ ஆரம்பித்தார். ‘அதுதான் உணர்வு திரும்பிவிட்டதே? இப்போது ஏன் அழுகிறீர்கள்?” என்று சுற்றியிருந்தவர்கள் கேட்டார்கள்.

நான் இந்த சாதாரண உலகத்துக்குத் திரும்பி வந்துவிட்டேனே என்று அழுகிறேன்.

நான் என் உணர்வை எப்போதும் இழக்கவில்லை. சாதாரண உணர்வுநிலையை விட மேம்பட்ட உணர்வுநிலையில் இருந்தேன். அது ஒரு புது உலகம். அது என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

அங்கே நான் என்ற உணர்வே எழவில்லை. என்றாலும் பெரிய மகிழ்ச்சி இருந்தது. அப்படி ஒரு மகிழ்ச்சியை நான் ஒரு போதும் வாழ்க்கையில் அனுபவித்ததிலை.”

அது தான் அவருடைய முதல் அனுபவம். ஜென் மதத்தில் வரும் சடோரி என்னும் நிலை அதுதான். அகந்தையற்ற நிலை.

அதன்பின் ராமகிருஷ்ணர் அப்படி ஓர் அனுபவத்தைத் தானாகவே தேட ஆரம்பித்தார். அதே குளத்துக்கு காலையில் போவார், மாலையில் போவார், இரவில் போவார். ஒவ்வொரு முறை போகும் போதும் அதே அனுபவம் அவருக்கு கிட்டியது.

அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்கும். அது எல்லாருக்கும் கிடைக் கும். கடவுள் எல்லாருக்கும் சொந்தம். கடவுள் எல்லாரிடமும் வருவார்.

நீங்கள் கடவுளை மறந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு போதும் உங்களை மறக்க மாட்டார். அவரால் உங்களை மறக்க முடியாது. நீங்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவரும் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

உங்கள் அகந்தையை உதறித் தள்ளிவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அதைப் புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

அதைப் புரிந்து கொள்ளும்போது அது தானாகவே மறைந்துவிடுகிறது. அகந்தை தானாகவே மறையும் தருணங்களைக் கூர்ந்து கவனியுங்கள். அந்த சில நொடிகளில் அதீத விழிப்புணர் வுடன் இருங்கள்.

காதல் கொள்ளும் போது அகந்தை மறைந்துவிடுகிறது. உடலுறவு கொள்ளும் போது அகந்தை அங்கேயிருப்பதில்லை.

உடலுறவில் உச்சத்தை எட்டும் போது அங்கே அகந்தை நிச்சயம் இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் உருகி, பிரபஞ்ச இருப்புநிலையுட்ன் இரண்டறக் கலக்கிறீர்கள்.

கடலில் இருந்து தனியாகக் கிளம்பிய அலை மீண்டும் கடலுக்குள் சங்கமமாகிவிடுகிறது.

ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைவாகத்தான் அந்த நிலை நீடிக்கும். தன்னுணர்வுடன் இருந்தால் அந்த நொடியின் அழகை நீங்கள் அனுபவித்து உணரலாம்.

அகந்தையற்றுப் போகும் கணங்களின் அழகை உங்களால் காணமுடிந்தால், அகந்தை எவ்வளவு அசிங்கமானது என்பதையும் உங்களால் உணரமுடியும். அகந்தையினால் வரும் துயரங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் என்னை நம்ப வேண்டியதில்லை. இந்த அனுபவத்தில் பங்கு கொள்ள உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

ஓஷோ.