
வந்தனா சதுருக்கு உண்டாகும் குழவி_
அன்பே உருவாகட்டும்!
எந்தனுக்கு இல்லாத பேறுகள் எல்லாம்_
என் பேரன் என்றும் பெறட்டும்!
அன்னைக்கு அன்னை, தந்தைக்குத் தந்தை_
என்றனைவரின் நற்குணமும்_
ஒன்றாகச் சேர்ந்து இவனன்றோ மனிதன்_
என்ற பெயர் உருவாகட்டும்!
கரு உருமாறி படிப்படியாய் வளருகையில்_
சரியாக உருமாறட்டும்!
இறைவனின் கைகள் உருவாக்கும் சிலையாய்_
அழகாக வெளிவரட்டும்!
அனைத்துச் செல்வங்களும் அவன் பெறட்டும்_
அதில் அன்பே பெரிதாகட்டும்!
விண்முட்டும் புகழெல்லாம் அவன் பெறட்டும்_
அதில் விநயமே சிறகாகட்டும்!
எம் அன்னை எம் தந்தை எமைக் காத்து வளர்த்ததுபோல்_
உனக்கும் அது வாய்க்கட்டும்!
எங்கிருந்தாலும் நீ வாழ்க கண்ணா_ உன்
எண்ணங்கள் உயர்வாகட்டும்!
பதவிகள் பட்டங்கள் பண மூட்டைகள் என்று_
எதுவுமே உனைத் தொடாமல்_
பெற்றோரை மகிழ்விக்கும் குணம் மட்டும் வரட்டும்_
மட்டற்ற அன்புறட்டும்!
அன்பே சிவமென்று உரைத்தது உண்மையென_
உன் வாழ்வு நிரூபிக்கட்டும்!
உனைச்சுற்றி வாழ்வோர் உற்சாகம் கொள்ளட்டும்_
உனை என்றும் கொண்டாடட்டும்!
