எழுத்தாளர் சிவசங்கரி/வி.ராம்ஜி

அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது, வீட்டு வாசற்கதவை சாத்துவதற்கு கொக்கியை எடுக்கும்போதுதான் கவனித்தேன்… அந்தப் பலகையை! பலரின் வீட்டில், ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்பது தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்கும். ஆனால் சிவசங்கரியின் வீட்டு வாசலில் இருந்த அறிவிப்பில், ‘சியாமளா உள்ளே இருக்கிறாள்’ என்றிருந்தது. சிவசங்கரி வளர்க்கும் நாயின் பெயர் சியாமளா!
எழுத்தாளர்களை ஆளுமையுடன் தொடர்புபடுத்திச் சொல்வார்கள். எழுத்தாளுமை என்பார்கள். அவர்களின் எண்ணங்கள், எழுத்தாகிறபோது, அந்த எழுத்துக்கு இனிமையோ வளமையோ சேர்ப்பதுதான் ஒரு எழுத்தாளருக்கான கைவந்த கலை. ஒரு கதையில் எதைக் கருவாகச் சொல்ல வேண்டும் என்று நாம் தீர்மானித்து, அதை எழுத்தாளருக்குச் சொல்ல முடியாது. அப்படி எழுதவும் மாட்டார்கள். பார்க்கிற சம்பவங்கள், கேட்கிற விஷயங்கள் அவர்களுக்குள் ஏதோவொன்றைத் தூண்டும். ‘இதை எழுது இதை எழுது’ என்று புத்தியானது அவர்களுக்குக் கட்டளையிடும். அந்தக் கட்டளையின்படி, வாசகர்களுக்குத் தங்களின் படைப்பைத் தருவார்கள். அப்படியான நெஞ்சுரம் கொண்ட, ஈர மனம் கொண்ட எழுத்துதான் சிவசங்கரியுடையது!
எழுத்தாளர்களில் ஆண், பெண் பேதமில்லைதான். ஆனால் அன்றைக்கு லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி என்று ஏகப்பட்ட பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள். எண்பதுகளை பொற்காலம் என்று பலவகையில் சொல்லுவோம். பெண் எழுத்தாளர்கள் நிறைய பேர் எழுதி, மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியதும் எண்பதுகளில்தான்!
‘’உரமும் பணமும் அறிவும் குவித்து வைப்பதால் ஒரு பயனுமில்லை. அதைப் பரப்பி வைப்பதால்தான் எல்லோருக்கும் பயன் கிடைக்கிறது. என் எழுத்தும் அப்படித்தான்… யாருக்கேனும் பயன்பட வேண்டுமே என்பதுதான் என் எழுத்து செய்யும் வேலை. மற்றபடி, நான் எழுத்தாளராக வேண்டும் என்றோ கதை எழுத வேண்டும் என்றோ ஒருபோதும் நினைத்து வந்தவளில்லை. அவை நிகழ்ந்தன… அவ்வளவுதான்’’ என்கிறார் சிவசங்கரி.
அப்பா சூர்யநாராயணன். அம்மா ராஜலட்சுமி. படித்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். 1963-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கணவரின் பெயர் சந்திரசேகரன். திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்துத்தான் எழுதுவதற்குள் இறங்கினார். சிறுகதையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். ’அவர்கள் சிரிக்கட்டும்’ எனும் சிறுகதை, ‘கல்கி’யில் வெளியானது. குழந்தை இல்லாத இளம் தம்பதியின் மன உணர்வுகளைச் சொல்லி, படிப்போருக்கும் அந்த வலியை எழுத்தில் கடத்தினார் சிவசங்கரி. இதையடுத்து நிறைய எழுதத் தொடங்கினார்.
மது போதையில் கிடப்பவனைப் பற்றிய கதையா அவர் எழுதிய ‘உனக்குத் தெரியுமா?’ எனும் கதையை ‘ஆனந்த விகடன்’ பிரசுரித்தது. மதுவின் மீதும் போதையின் மீதும் போதைக்கு அடிமையானவர்களின் மீதும் அப்படியொரு கோபம் சிவசங்கரிக்கு உண்டு. அப்படித்தான் ‘ஒரு மனிதனின் கதை’ என்கிற நாவலை எழுதினார். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தக் கதை.
எழுபதுகளின் தொடக்கத்தில் சிவசங்கரி ரொம்பவே பேசப்பட்டார். தனக்கென வாசகர் வட்டத்தை வளர்த்துக்கொண்டார். இயக்குநர் கே.பாலசந்தர், சிவசங்கரியின் கதையைப் படித்துவிட்டு, அன்றிரவு தூங்கவே இல்லை. மறுநாள் சிவசங்கரியிடம் பேசி, “உங்களின் கதை என்னை ரொம்பவே பாதிச்சிருச்சு. இதைப் படமா பண்ண உங்க அனுமதி வேணும்’’ என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். ‘47 நாட்கள்’ எனும் படம் சிரஞ்சீவி, ஜெயப்ரதாவைக் கொண்டு இயக்கினார் பாலசந்தர்.
இயக்குநர் மகேந்திரன் எப்போதுமே நாவல்களைப் படமாக்க வேண்டும் என விரும்புவார். ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ எல்லாமே நாவலும் சிறுகதையும்தான். சிவசங்கரியின் கதையைத்தான் ‘நண்டு’ படமாக இயக்கினார் மகேந்திரன்.
‘ஆயுள் தண்டனை’ எனும் நாவல், ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்கிற திரைப்படமாக வந்தது. ‘ஒரு மனிதனின் கதை’யும் திரைப்படமாக வந்தது. ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ எனும் நாவல் முக்தா சீனிவாசன் இயக்கத்தில், சிவகுமார், லட்சுமி, ஸ்ரீப்ரியா நடிப்பில் ‘அவன் அவள் அது’ என வெளியானது.
சிவசங்கரியின் ‘இன்னொருத்தி ப்ளஸ் இன்னொருத்தி’ எனும் நாவல் சமூகத்தில் பெண்களிடயே மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. ’திரிவேணி சங்கமம்’ எனும் நாவலைப் படித்துவிட்டு, கன்னடத் திரையுலகில் வந்து கதை உரிமையை வாங்கிக் கொண்டு, ‘மறையாத தீபாவளி’ என்று திரைப்படமாக எடுத்தார்கள். கதையில் வரும் காட்சிகளை, ஒரு சினிமா போல், திரைக்கதை போல் எழுதுகிற ஜாலம் சிவசங்கரியின் முத்திரை என்றே கொண்டாடப்பட்டது.
’வெட்கம் கெட்டவர்கள்’ என்ற நாவல் ‘பெருமை’ என்று சினிமாவாக்கப்பட்டது. ‘சுட்டமண்’, ‘இனி’, ‘அம்மாபிள்ளை’, ‘இரண்டுபேர்’, ‘ஒரு சின்னநூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?’, ‘நான் நானாக’, ‘பாலங்கள்’, ‘மலையின் அடுத்த பக்கம்’ என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதியிருக்கிறார்.
பயணம் எல்லோருக்குமே சுகம். அதிலும் படைப்பாளிகளுக்குப் பரமசுகம். இந்தியா, வெளிநாடு என்று பயணித்த இடங்களை, பார்த்த விஷயங்களை, பாதித்த செயல்களை, ஈர்க்கப்பட்ட மனிதர்களை பல கட்டுரைகளாக, பயணக் கட்டுரைகளாக எழுதினார்.
அரசியலில் இருந்தாலும் வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் மூப்பனார். எழுத்தாளர் சிவசங்கரியின் கதைகளைப் படித்துவிட்டு, பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவரின் படைப்புகளைப் படித்துவிட்டு பாராட்டுகிற அளவுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ஜெயலலிதாவுடன் ஒரு தோழியைப் போல் நன்றாகப் பழகியவர்களில் சிவசங்கரியும் ஒருவர்.
ராஜீவ் காந்தியுடன் சென்று, அவர் பயணித்த விஷயங்களை ஒரு தொடராக்கி எழுதினார். இந்திரா காந்தி, அன்னை தெரசா முதலானோரிடம் விரிவானதொரு பேட்டியை வித்தியாசமாக எடுத்து எழுதினார். அவரின் கதைகள், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்திருக்கின்றன. வாழ்வில் உள்ள பலதரப்பட்ட மனிதர்களை அவர் கதை மாந்தர்களாக்கியிருப்பார்.
சிவசங்கரியின் படைப்புகளில் ஒழுங்கும் ஒழுக்கமும் போதனையாக இல்லாமல், ஒரு இயல்பாகவே சொல்லப்படும். வாழ்வியலாகவும்
மனரீதியாகவும் உள்ள சிக்கல்களையும் ஒவ்வொருவரின் ஒவ்வொருவிதமான கோணங்களையும் அவரவர் பார்வையில் இருந்தபடி சரிதவறுகளுக்கு அப்பாற்பட்டுச் சொல்கிற எழுத்து, சிவசங்கரியுடையது. ’சூரிய வம்சம்’ என்று தன் சுயசரிதையை இரண்டு பாகங்களாக எழுதியிருக்கிறார்.
இன்றைக்கு சிவசங்கரி எழுதுவது குறைந்திருக்கலாம். ஆனால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் அவர் எழுதிய கதைகளின் தாக்கம் இன்றைக்கும் வாசகர்களை ஈர்த்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஏதோவொரு உணர்வைத் தூண்டிவிட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
‘அன்புக்காகத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அன்பைப் போதும் என்று எவரும் சொல்லுவதே இல்லை. அன்பை எடைபோட எந்தத் தராசும் இல்லை’ என்பதைத் தன் கதைகளினூடே வலியுறுத்திக் கொண்டே இருந்தார் சிவசங்கரி. அந்த அன்பையே தன்னைச் சுற்றியிருப்போருக்கும் வழங்கிக்கொண்டே இருக்கிறார்.
1942 அக்டோபர் 14-ல் பிறந்தவர் சிவசங்கரி. 1968-ல் எழுத்துலகில் இறங்கி, ஆகச்சிறந்த ஆளுமைமிக்க எழுத்தாளர் என்று போற்றிக் கொண்டாடப்படுபவர்.
நன்றி: காமதேனு, இந்து தமிழ் திசை

One Comment on “எழுத்தாளர் சிவசங்கரி/வி.ராம்ஜி”

  1. எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் சியாமளா காலமான சமயததில் எழுதின கட்டுரையை பத்திரமாக வைத்திருக்கிறேன்.2001 ல் நடந்த ஒரு நிகழ்வில் அவர்களை சந்தித்த பேசிய போது அந்த கட்டுரையை காண்பித்த போது அவர்கள் கண்கள் கலங்கியத்

Comments are closed.