மாண்டஸ்/அனங்கன்

டிசம்பர்பூக்களைப் போல இப்போதெல்லாம்
டிசம்பரில் புயல் பூக்கிறது.
கடற்கரைவாசிகளை முகாம்களில்
அடைப்பதற்காகவே வருகிறது
ஆண்டுதோறும்.

வீடுஉள்ளவனும்…வீடற்றவனும்
அகதியாய் அலைவது டிசம்பரில்தான்.

சாக்கடைகள் சுத்தப்படுத்தப்படுவது
இயற்கையால் நடக்கிறது….அது
வீட்டுக்குள்ளும் நுழைகிறது.

புயலுக்கு அழகான பெயர்களை
வைத்துப்பார்க்கிறார்கள்….
அதற்கான பின்விளவுதான்
அழகியலோடு பொருந்திப்போவதில்லை.

பெருங்காற்றோடு குளிரும் அடிக்கிறது….
மின்இணைப்பு இல்லை…
ஒரு தேநீருக்கு அலையும் மனதை
இழுத்துப்பிடித்துவைத்திருக்கிறேன்…
இல்லாதவர்களின் துயரை
நினைவூட்டி.

காத்திருக்கிறேன் கடந்துசெல்லும்
புயலுக்காக….
கடந்தபின் எத்தனை செய்திகள்
காத்திருக்கிறதோ….