சந்நிதித் தெரு வீடு. சுவாமி யோகி ராம்சுரத்குமார் /அவினாஷ் ஸ்ரீகாந்த்

சந்நிதித் தெரு வீடு. சுவாமி யோகி ராம்சுரத்குமார் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். எதிரில் ஒரு மத்திய வயது விதவைத் தாயும் அவரது இளம் மகளும் அமர்ந்திருந்தனர்.

அந்த விதவைத் தாயின் கணவர் இறந்து சில வருடங்கள் கடந்து விட்டது. மகள் திருமணப் பருவத்தை எட்டியிருந்தாள்.

பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தின் முழு பொறுப்பையும் சுவாமி ஏற்றிருந்தார்.

அந்தத் தாயின் கணவர் இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு “சுவாமி இது இனி என் குடும்பம் அல்ல. இது தங்கள் குடும்பம்,” என மனப்பூர்வமாக உணர்ச்சிப் பெருக்குடன் சுவாமியிடம் கூறினார். அவர் சுவாமியிடம் இவ்வாறு கூறும்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. சுவாமியின் விழிகளும் ஈரமானது. சுவாமி பக்தரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பக்தரின் இரு கரங்களையும் பற்றி ஆசுவாசப்படுத்தினார்.

அன்று அந்த அம்மையார் தன் பெண் திருமண விஷயமாக சுவாமியிடம் பேச வந்திருந்தார். சுவாமி மிகுந்த ஆலோசனைக்குப் பின் ஒரு வரனை அந்தப் பெண்ணுக்காகப் பரிந்துரைத்தார். தாய் மகிழ்வடைந்தார். மகள் முகத்தில் சந்தோஷம் தென்படவில்லை. அவள் மௌனமாக இருந்தாள்.

சற்று நேரத்தில் சுவாமி அவர்களுக்கு விடையளித்து அனுப்பி வைத்தார்.

தாயும், மகளும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மகள் தன் தந்தையின் நண்பரைப் பார்க்க விரும்பினாள். அவர்கள் ஊர் செல்லும் வழியிலே அந்த நண்பர் வாழும் ஊரும் இருந்தது. மகளின் விருப்பப்படி தாயும், மகளும் அந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றனர்.

அந்த நண்பரும் சுவாமியின் அடியவர் ஆவார்.

நண்பர் அவர்களை வரவேற்று அமர வைத்தார்.

“மாமா, சுவாமி எனக்குப் பரிந்துரைத்த வரனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுவாமியிடம் தைரியமாகச் சொல்லவும் முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு இந்த வரனை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.”
அந்தப் பெண் கலங்கியவாறு சொன்னாள்.

“நீ தைரியமாக சுவாமிக்கு உன் உணர்வுகளைக் கடிதம் மூலம் தெரியப்படுத்தலாமே,” என அந்த அன்பர் சொல்ல அப்பெண் அப்படியே செய்வதாகக் கூறினாள்.

தாய்க்கோ பெரும் ஏமாற்றம், கோபம், ஆற்றாமை. அவரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. எனினும் வேறு வழியின்றி மகள் சுவாமிக்கு கடிதம் எழுதுவதற்கு ஒப்புக் கொண்டார்.

அவர்கள் ஊர் திரும்பியதும் மகள் சுவாமிக்கு தன் எண்ணங்களைக் கடிதமாக எழுதினாள்.

அடுத்த நான்கு நாட்களில் சுவாமியிடமிருந்து அந்தப் பெண்ணின் அன்னைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை சுவாமியே தன் கைப்பட எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் சுவாமி தான் பரிந்துரைத்த வரனைக் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும், மகளுக்குப் பிடிக்காத வரனை மணம் செய்யச் சொல்லி நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ வற்புறுத்தக் கூடாது என்றும், மகளிடம் கோபித்துக் கொள்ளக்கூடாது என்றும், தந்தை அவளுக்கு பிடித்தமான வரனை அனுப்பி வைப்பார் என்றும் எழுதியிருந்தார்.

மகள் மகிழ்ச்சி அடைந்தாள். தாய் குழப்பமடைந்தார். சில மாதங்கள் கடந்தது.

அப்பெண்ணுக்கு மூன்று இடத்தில் இருந்து பெண் கேட்டு தகவல் வந்தது. அதில் ஒரு வரன் அப்பெண்ணை மிகவும் கவர்ந்தது.

தாயும், மகளும் மீண்டும் சுவாமியிடம் சென்றனர்.

தாய் வந்த வரன்கள் குறித்து சுவாமியிடம் விளக்கினார். சுவாமி தன்னிடமிருந்த பேனாவையும், ஒரு காகிதத்தையும் தாயிடம் கொடுத்து அந்த மூன்று வரன்களின் பெயர்களையும் எழுதச் சொன்னார். தாய் எழுதி அந்த காகிதத்தையும் பேனாவையும் சுவாமியிடம் கொடுத்தார்.

சுவாமி சற்று நேரம் காகிதத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஒரு வரனின் பெயரை மட்டும் பேனாவினால் வட்டமிட்டார். அப்பெண்ணை அழைத்து அந்தக் காகிதத்தை அவள் கையில் கொடுத்து அப்பெயரைப் படிக்கச் சொன்னார்.

அந்தப் பெண் அந்த வரனின் பெயரைப் படித்தாள். அவள் முகம் மலர்ந்து பிரகாசித்தது. அவள் விரும்பிய அந்த வரனையே சுவாமி வட்டமிட்டுக் காட்டியிருந்தார். அப்பெண் சுவாமியை நமஸ்கரித்தாள். அவள் கண்களில் ஆனந்தம் அருவியாய் கொட்டியது.

அவள் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. இன்றுவரை அப்பெண் ஆனந்தமாக தன் கணவன், குழந்தைகள், மருமகள் என நிறைவாய் வாழ்ந்து வருகிறாள்.

யோகி ராமசுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா

One Comment on “சந்நிதித் தெரு வீடு. சுவாமி யோகி ராம்சுரத்குமார் /அவினாஷ் ஸ்ரீகாந்த்”

  1. அற்புதங்கள் செய்கிற‌ துறவிகளுக்குத் தான் மவுசு என்று ஏற்பட்டுப் பலகாலம் ஆகிவிட்டது. குறைந்த பட்சம் ஒரு புளியங்கொட்டையாவது காற்றில் இருந்து வரவழைத்தால்தான் அவர் புனிதர் என்று உலகம் நம்பும். வெறுமனே உபதேசம் செய்கிறவர்களை சாமானியர்கள் சீண்டுவதில்லை.

    இந்த வகையில் அற்புதம் செய்யாமல் நெடுங்காலம் வாழ்ந்த துறவிகள் நம் காலத்திலேயே அநேகர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அந்த மாதிரி அற்புதங்களில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதில்லை.

    அப்போதுதான் துவங்கப்பட்டு இருந்த‌ ரமணாசிரமத்தில் நுழைவாயிலுக்கு எதிரே ரமணர் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தன் இரண்டு கால்களுக்கும் நாராயணத்தைலம் போன்றதொரு வாசனையான வலி நிவாரணியைத் தடவி நீவிக்கொண்டு இருந்தார். அந்நாளில் வேறொரு துறவி பிறிதொரு இடத்தில் மாயாஜாலங்கள் செய்து பிராபல்யம் அடைந்திருந்தார். ஆக, திருவண்ணாமலை வரும் கூட்டத்திற்கு ஆட்டநாயகராக அவர் உருவெடுத்து இருந்தார்.

    துரதிர்ஷ்டவசமாக திருவண்ணாமலை வருகிற கூட்டம் கேள்விஞானத்தாலும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட டூரிஸ்ட் இடங்களுக்கான வரிசை உத்தேசித்தும், பெருமளவில் ரமணாசிரமத்தை முற்றுகை இட்டு இவர்கள் நிம்மதி இழந்து இருந்த நேரம்.

    வாசலில் அமர்ந்து எண்ணெய் தடவுவதன் தாத்பரியத்தை சூரிநாகம்மா பகவானிடம் கேட்க, அவர், “தானே தன்னை சுகமாக்கிக் கொள்ளாத கையாலாகாத துறவகயைப் பார்ப்பதில் என்ன லாபம் என்று ஊக்கம் கெட்டு, வருகிறவர்களின் அபிப்பிராயங்கள் மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் அல்லவா” என்றாராம்.

    விசிறி சாமியார் அவர்களின் பிராபல்யத்தை விசிறி விட்டவர்கள் இரண்டு பேர். பாலகுமாரன் என்று அகில உலகமும் அறியும். ஆனாலும், விசிறி சாமியார் அற்புதங்கள் செய்ய வல்லவர் என்று அவர் எங்கேனும் பதிவு செய்துள்ளாரா என்று பலகாலம் முன்பாகவே பாலகுமாரனைத் துறந்து விட்டதால் அறிந்து கொள்ள முடியவில்லை. அப்படியே இருந்தாலும், அது பாலகுமாரன் செய்த மிரக்கிள்களாகத்தான் முடிந்திருக்கும். அவர் குரல் தாண்டிய வேறொரு குரலை அவர் என்று அனுமதித்து இருக்கிறார்? (ரா.கணபதியின் தெய்வத்தின் குரலில் பெரியவரின் குரல் சரிபாதியாகவாவது இருந்தது).

    இன்னொருத்தர் எம்.எஸ்.உதயமூர்த்தி. தற்போது விக்கிமீடியா கூட இல்லாமல் மறைந்து போன மணியனின் துணையால் பிரபலமாகி சகட்டு மேனிக்கு மனிதர்களுக்கான‌ ஊக்கக் கட்டுரைகள் எழுதித் தள்ளியவர் தான், விசிறி சாமியார் அற்புதங்கள் செய்ய வல்லவர் என்று வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
    ஒரு குமுதத்தின் பிரத்யேக இதழில் முதல் பக்கமே இவர் படம் முழு அளவில் போட்டு, ஒருத்தரின் ரத்தப்புற்றுநோயை குணமாக்கிய மகிமையை விவரித்து இருந்தது இன்று போல் இருக்கிறது.

    எனக்கும் விசிறி சாமியார் அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டி இருக்கிறது. அவரால் தீண்டப்பட்டு இருக்கிறேன்.
    என் வரையில் இவர் பக்தகோடிகளின் கற்பனைக்கு எட்டக்கூடாத சந்நியாசியாகத்தான் தெரிகிறார்.

    பார்பி டால் என்கிற பெண் பொம்மைகளை பெண் குழந்தைகளுக்கு பரம்பரையாக வாங்கித் தருவது வழக்கம்.

    லேசாக வளர்ந்த குழந்தைகள், ஆன மட்டும் அந்தக் கண்சிமிட்டும் பொம்மைகளை சித்திரவதை செய்து, உடை மாற்றிக் கிழித்து, கண்மை இட்டு, இன்னபிற அவலங்களுக்கு அப்பொம்மைகளை ஆட்டுவிப்பது வழக்கம்.

    நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து சித்தியடைந்த அமரிக்கையான சந்நியாசிகள் இந்த வகையில் தான் சித்திரவதை அனுபவிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

Comments are closed.