சலிப்பும் சண்டையும்/க நா சு

நான் பார்ப்பதையே நீயும்
பார்க்கிறாய் ஆனால் நான் நினைப்பதை
நீ நினைப்பதில்லை.

நான் வாழ்கிற உலகத்திலேதான்
நீயும் வாழ்கிறாய் ஆனால்
இருவரும் அதுபற்றிப் பேசும்போது
ஒரே உலகமாகத் தோன்றவில்லையே!

வேறு வேறு உலகமாகத் தோன்றுவதும் ஏன்
வேறு வேறு நினைப்புகள் ஏற்படுவதேன்

வித்தியாசங்கள் மறைந்துவிட்டால்
வாழ்க்கையிலே சலிப்பு ஏற்பட்டுவிடும்
என்கிறாய் ஏற்றுக் கொள்கிறேன்.

சலிப்பு ஏற்பட வேண்டாம். சண்டையும்
ஏற்படாமல் இருக்கட்டுமே போதும்.