கவிதைப்போர்வாளும்…கைவளையும் /அனங்கன்

பாரதி! நீ கவிதைப்போர்வாள்…
நான் கைப்பிடியில்லாத அட்டைக்கத்தி….
இருவரையும் கவிஞரென்ற
எல்லைக்குள் கொண்டுவருவது
காலக்கூத்துத்தான்.

விடுதலைக்காக பாடினாய்…
விரும்பியதையெல்லாம் பாடினாய்…
உனக்கான களமிருந்தது…

இன்று களமெல்லாம் காசைவைத்துத்தான்…
சட்டமெல்லாம் அரசியல்
சட்டைப்பையில்தான் போ…

பண்டிதர்களிடமிருந்து தமிழைப்பிடுங்கி
எளிமைப்படுத்தினாய்….
நாங்கள் மேடைஏறிப்பொங்க
உன்னைவிட்டால் வேறு கதியில்லை….

நீ உன்நூலைக் கடைசிவரை
பதிப்பிக்க முடியாமல் போனாய்…
இன்று நாங்கள் எத்தனையோ நூல்களைப்
பதிப்பித்து இலவசமாய்க் கொடுத்தாலும்….
அட்டையைக்கூட
திருப்பிப்பார்க்க ஆளில்லை….

ஆண்டுக்கு இருமுறையாவது நினைத்துபார்க்க
உன்னிடம் கவித்துவம் இருக்கிறது….
தேசியக்கவியாகிவிட்டாய்…

இதில் உனக்கு இணையாக நாங்களும்
கவியென்ற சொல்லிக்கொள்ள
கொஞ்சம் கூச்சமாய்த்தான் இருக்கிறது….
ஔிரும் பாரதத்தில் அதெல்லாம்
பார்த்தால் வாழமுடியுமா….?