என்னருமைப் பாட்டனே/வே.கல்யாணகுமார்

பாட்டனாரே.. பாரதியே..
சமூக அவலங்களை
நாரு நாராய் கிழித்தாயே
பாட்டனாரு ஆனாயே..

காலனை அழைத்து மிதிப்பேனென்றாய்..
சாதிப்பாம்பின் சங்கை
மிதித்தும் நின்றாய்..
யாணை மிதித்தது என்றார்களப்பா..
மிதித்தாலென்ன?
உன் கவிநெருப்பை
மிதித்தவன் எவனுமில்லையே..!

கருத்த இரவினிலே விடுதலை
நெருப்பாகினாய்..
முக்காடு இட்டு மூலையிலே
இருத்திய பெண்மைக்கு..
முகம்திருப்பி பொட்டுவைத்து
கட்டுகளை வெட்டிவிட்டாய்.!
முகமதியர் கடைக்கு உன் பார்ப்பன
பத்தினியை கைவீசி அழைத்துப் போய்
சாயா குடிக்க வைத்தாய்..
சமம் இல்லை சாதி யென்றாய்
ஆங்கொரு அரிஜனனுக்கு
பூணூல்அணிவித்து..
இன்றுமுதல் நீ..
பார்ப்பான் என்றாய்.!

கஞ்சாவின் மயக்கத்தை
மிஞ்சியக் கவிதைகள்..
நெஞ்சிலே தேசத்தை நினைத்து
கொதித்த பா வரிகள்..
அஞ்சாது சிறைசென்று..
புதுவையிலே புனலாடி
செஞ்சோற்று கடன் தீர்த்த
கவிக்காட்டு சிங்கம் நீதானே..
ஐயா

பஞ்சமும்வறுமையும்
பஞ்சகச்கம் கட்டிவர..
பாட்டையே பறிமாறி..
பசியாற்றி கொண்டவன் நீ..
நூலறுத்து வீசி..
எழுது கோலெடுத்து பாடிவந்தாய்..

சின்னஞ் சிறு வயதில் நீ
செய்திட்ட சாதனையை
எண்ணி முடிப்பதற்கும்
என் ஆயுள் போதாதே..

எட்டையப்பனால் அன்று
ஏற்பட்ட இழிப்பெயரை..
எட்டையப்புரம் பிறந்து..
துடைத்தெறிந்த தூயவன் நீ..

தனிக்குவலை..
தரைமிதிக்க தடையிந்த
தடைகளையே உடைத்தெறிந்த
உணர்ச்சியுள்ள பாவலன் நீ ..

பாட்டுக்கு விடுதலை..
நாட்டுக்கு விடுதலை..
உடல் கூட்டுக்கும் இளம்வயதில்
விடுதலை தந்ததனால் நீதான்..
உண்மையான விடுதலைக் கவிஞன்!
வீர வணக்கம்.

பெங்களூரூ.