கவிதந்த பாரதி/
செ.புனிதஜோதி

என்னுள் இறங்கி விட்டாய்
என்னைப் புரிய வைத்தாய்
சிந்தைக்குச்
சிறகைத் தந்தாய்
கவிவானில் பறக்க விட்டாய்

தலைகுனிந்த எழுதுகோலால்
தலைநிமிர்ந்த கவியல்லவா
வறுமை தின்றபோதும்
வறுமைக்கும் பாட்டாலே
விருந்து வைத்தாய்

பழமை ஊறிய கூட்டத்தில்
புதுமைப்படைக்க வந்த மகாகவி
பார்க்கும் பொருளில் எல்லாம்
கவிப்பாவையை ஒளிரச்செய்தாய்

ஒடுங்கிய உன்உடலில்
ஒரு பரந்த வானம்
விழிகள் இரண்டில்
பறவையின் தொலைநோக்குப் பார்வை
சிந்தனையெல்லாம்
அகன்ற நேர்மறை ஊற்றுக்
கருத்துகள் எல்லாம்
அக்னிப்பிழம்பு
எழுத்துகள் தோறும்
ரௌத்திரத் தெறிப்பு
உள்ளம் முழுதும்
குழந்தையின் பரவசம்
அணுக்கள் முழுதும்
அறிவின் சுனை
எண்ணம் முழுதும்
சுதந்திர தாகம்

உன்னைப்போல் எவருண்டு
பாரதியே
பெண்மையைப் போற்றிய
முதல்கவி நீயே
எமக்காகக் கனவு கண்ட
நாயகன் நீயே
உம்மைக் காண
உன்குடில் வந்தேன்
என்னைப் பாடு
நீயே உரைத்தாய்
சின்னப்பிள்ளையின்
கிறுக்கல் என்றேன்
சிறியவர்,பெரியவர்
எவருமில்லை
உனக்கே நீயே பெரியவள்
என்றாய்
சிந்தை கலங்கி
வணங்கி நின்றேன்
தாயே பராசக்தி
கலங்கலாமோ
எம்மையா பராசக்தி
என்றீர் என்றேன்
பெண்கள் அனைவரும்
அன்னையின் வடிவமென்றீர்
போகப்பொருளாய்
பார்க்கும் பாரில்
அன்னை என்றே
நீரே உரைத்தீர்
எரிதழல் கொண்டு
வருகிறேன் தாயே
அனைவரின் தலையைக்
கொய்தீடுவோம் என்றீர்
சட்டென்று விழித்தேன்
பாரதி…தீ தலைப்பிட்ட
கவித்தாள் என்னருகில்

சிந்தை முழுதும் நீயே
உன் சீட்டுக்குருவி நானே
முந்தை பலனால் இந்த இரவில்
என்னுள் இறங்கிய கவி இறையே
எம்மைப் பாடவைத்த சாரதி நீயே
உம்மை வணங்குகின்றேன்
ஜெய ஜெயபாரதி ஜெய ஜெயபாரதி
ஜெய ஜெயவே