
பிஞ்சு நெஞ்சில் இன்று – நச்சு
விதைக்க அலையும் கூட்டம்
விஞ்சி நிற்கு திங்கே – அந்த
வேரைக் கிள்ளி வீசு !
அஞ்சி ஓடி டாமல் – நின்று
அறத்தைக் காக்க வேண்டி
துஞ்சி டாமல் நாளும் – சக்தி
ஊற்றெ டுக்கப் பேசு.
தேச பக்தி என்று – நாவால்
தேனு ருக்கிச் சொல்வார்
காசு பண்ணும் மூடர் – பொய்யைக்
கட்ட மைத்து வாழ்வார் !
பேசும் வாக்கைக் காத்து – நல்ல
பெரிய செய்கை செய்வோர்
வாசக் கமலம் போன்ற – தூய
மாண்பு கொண்டோ(ர்) ஆவர்.
பள்ளிச் சிறுவர் நெஞ்சில் – தீய
பழக்கம் விதைக்கும் பாடம்
கொள்கை யாக வைத்தால் – நாட்டில்
குற்றம் பெருகி டாதோ?
பிள்ளைப் பருவ நாளில் – செல்வப்
பித்தில் சிக்கி டாமல்
உள்ளம் தொட்டுச் செய்யும் – அன்புத்
தொழிலைக் கற்க வேண்டும்.
சின்ன வயது தொட்டே – நித்தம்
சிறந்த நூல்கள் மூலம்
தன்னை உயர்த்திக் கொள்ளும் – ஞான
தாகம் கொள்ள வேண்டும்
என்ன என்ன வென்று – கேள்வி
கேட்கும் மனத்தி னாலே
முன்னர் உள்ள ஐயம் – தானே
முழுதும் நீங்கிப் போகும்.
(12.12.2022 21.13 pm)
