அபஸ்வரம்/க நா சு

வேப்ப மரத்தடி வீட்டில்,
பரமேசுவர அய்யர் ஹோட்டலுக்குப் பின்னால்
ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்போது
என் தாயார் இறந்து போனாள்.
திருவையாறில் ஸப்தஸ்தானப் பல்லக்கு
தஞ்சாவூர் வைதிகர்கள் எல்லாம்
போய்விட்டிருந்தபடியால் அம்மாவின் பிணத்தை
வைதிகர்களைக் கண்டுபிடித்து
சாமகிரியைகள் சேகரித்து எடுக்க
காலதாமதமாகியது. அன்று எதிர் வீட்டில்
நாதஸ்வரம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்த
ஒரு வாலிபன் அபஸ்வரமாக ஊதிக் கொண்டிருந்தான்
அது 1924. ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு
1974-ல் வேப்ப மரத்தடி வீட்டு வாசலில்
சற்று நேரம் நின்றபோது – பரமேசுவரஅய்யர்
ஹோட்டல் இல்லை – ஆனால் அதே
நாதஸ்வர அபஸ்வரம் கேட்டது.
பிள்ளையோ, பேரனோ, அவனே தானோ?

One Comment on “அபஸ்வரம்/க நா சு”

Comments are closed.