சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் நண்பர் எஸ்.சண்முகம் எழுதி வெளிவந்திருக்கும் ‘மா.அரங்கநாதன்’ நூலை சண்முகம் எனக்கு நேற்று அனுப்பிக்கொடுத்தார். இந்த நூலில் மா.அரங்கநாதனின் தமிழ்த்துவம் என்ற கட்டுரைத் தலைப்பு என்னை வெகுவாக கவரவே அதை முதலில் வாசித்தேன். சண்முகமும் தமிழவனும் மா.அரங்கநாதன் தமிழ்த்தன்மையோடு எழுதிய எழுத்தாளர் என்று பல வருடங்களாகக் கூறி வருகின்றனர். இது வட்டார வழக்கு எழுத்தாளர்கள் தாங்கள்தான் தாங்கள் மட்டும்தான் தமிழ் வாழ்க்கையை எழுதுபவர்கள் என்ற உரிமை கோரலிலிருந்து வேறுபட்டது. மிகவும் சரளமாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட சண்முகத்தின் நூலில் மா.அரங்கநாதனின் தமிழ்த்துவம் என்பது சித்தர் மரபு, பக்தி மரபு ஆகியவை சார்ந்த இந்திரனை முதன்மைப்படுத்திய வேத சடங்குகளுக்கு எதிராக சிவனை முன்னிறுத்திய அவைதீக மெய்யியல் என்று சொல்லப்படுகிறது. இதன் ஆரம்ப நிலைகள் அணிலாடு முன்றிலார் எழுதிய குறுந்தொகைப் பாடலொன்றில் இருப்பதாகவும் சண்முகம் குறிக்கிறார். இந்த அவைதீக தமிழ்த்துவ மெய்யியலின் இரு அனுபவ நிலைகளாக இன்மையை உணர்தலும் அனுபூதியை அனுபவித்தலும் என்பதாக நான் சண்முகத்தின் நூலிலிருந்து புரிந்துகொள்கிறேன். மா.அரங்கநாதன் சைவ சித்தாந்தத்தை தன் மெய்யியலின் பகுதியாக ஆனால் பக்தி இலக்கிய காலகட்ட சைவசித்தாந்ததிலிருந்து வேறுபட்ட ஒன்றாக கேள்விக்கு விடையளிக்கும் முகமாகக் குறிக்கிறார்; “தமிழ் கூறும் சிவனும் ஒரு சித்தன்தான். அவன் நிலந்தருதிருவிற்பாண்டியன் என்று அறியப்படுபவன். ஏதோ ஒரு கடல் அரிப்பின் போது நிலமிழந்த மக்களுக்கு நிலத்தைப் பங்கிட்டு அளித்த வேடர் தலைவனாக இருக்கக்கூடும். வைதீகவாதியான ஆதிசங்கரர் கூட உண்மையைப் புறக்கணிக்க முடியாது. சிவனுக்கு இந்த உருவத்தையே அளிக்கிறார். நப்பின்னையின் – காதலன் மாட்டுச்சண்டை வீரன் கண்ணனை காசியபக் கோத்திரத்து விஷ்ணு என்று ஆக்கிவிட்டாலும் கூட தமிழ்ச்சித்தனாகிய சிவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. மாணிக்கவாசகரே இதைப்பற்றிக் கூறுகிறார் ;
“காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன்”

இந்த வரிகளோடு பட்டினத்தாருக்கு மருதப்பன் அளித்த மண்ணையும் சாணி வரட்டியையும் சேர்த்துக்கொண்டால் சிவனது சித்தமும், சித்தரின் சிவமும் தெரிந்துவிடும். பழந்தமிழர் கூறும் நாநில மக்கள் அவர்கள்” (பக்கம் 83)

எனக்கு பல கேள்விகள் எழுகின்றன. இப்படி ஒன்றை தமிழ்த்துவம் என்று சாரம்சப்படுத்துவது தத்துவார்த்தரீதியாக உண்மையானதுதானா? திராவிட இயக்கத்தின் ஆரம்பகால கட்டத்தில் மறைமலையடிகள் பெரியாரோடு நடத்திய விவாதத்தில் சைவமே தமிழ் மதம் என்று வாதிட்டதற்கும் மா.அரங்கநாதனின் வாதத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்? அவைதீக சடங்கு சாராத மெய்யியல் என்பதை பௌத்தமும் சமணமும் இஸ்லாமிய சூஃபி ஞானிகளும் ( தமிழில் குணங்குடி மஸ்தான் சாகிபு போன்றவர்கள்) முன்வைக்கவில்லையா? பல விவாதங்களுக்கும் பரிசீலினைகளுக்கும் உட்படுத்த வேண்டிய நூல்.