
பாண்டிய நாட்டின் ஒரே பெண் ஆழ்வார் “ஆண்டாள்”.
திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.
இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இதில் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் “திருப்பாவைப் பாடல்கள்” ஆகும்.
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருந்தனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர்.
இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல்.
இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
ஆண்டாள் தனது பதினைந்தாம் ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன்னால் எழுதப்பட்டவைதான்……
1.திருப்பாவை
2.நாச்சியார் திருமொழி
ஆண்டாளின் முதல் படைப்புதான் “திருப்பாவை”.
ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்புதான் “திருப்பாவை”
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!
பாடலின் விளக்கம்;
சீர்மிகுந்த ஆயர்பாடிச் செல்வச் சிறுமிகளே, மார்கழி மாதத்தில் பூர்ணச் சந்திரன் ஒளியில் நீராடக் காத்திருக்கும் சிறுமிகளே வாருங்கள். பகைவர்க்கு கூர்வேலைக் கொண்டு கொடுந்தொழில் புரியும் நந்த கோபரின் மகனும், அழகிய மலரரும்பு போன்ற கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம் போன்ற புதல்வன் அவன் கருமையான உடலை உடையவன். ஆனால் முகமோ ஒளிவீசும் நிலவைப்போன்றது. அப்படிப் பட்ட “நாராயணன்” நமக்கு வரங்கள் தருவான். நாம் அவனைத் துதித்து, வேண்டி பாரோர் புகழும் வண்ணம் நாம் நோன்பு நோற்று நம் பாவையை வணங்குவோம்.
