கசங்கும் பிஞ்சுகள்/செல்வி பிரகாஷ்

மோப்பக்குழையும் அனிச்ச மலர்கள்
மோகப்பிசாசுகளால்
அழிக்கப்படுவதா.

குழைந்துபோகும் அரிசியிலா
காட்டேறிக்குப் படையல்

கோரத்தாண்டவம் ஆடிப்போகும்
அந்த குரோத பேய்க்கா
குங்குமப்பூ வாசம் அந்த
குழந்தை மனதில் வீசியது?

மலராத மொட்டுகளைக் கடித்துப்போடும்
ஓணான்களின் தோட்டத்தில்
தாய் பறவைகளின் பரிதவிப்பு

நட்சத்திரங்களை கிரகணங்கள்
விழுங்குவதா? அதற்குத் தர்ப்பைப் புல்
போட்டு சமூகத்தை மூடுவதா?

அடிக்காதத் தென்றலுக்கா
வேர்த்துப்போனாய் வெட்கங்கெட்டவனே!

சிறுமியின் சிரிப்பெடுத்து சிறு பூக்கள்
மலர்கையில் ரீங்காரமிட்டபடி
பெருவண்டாய் பூமி மகிழ்ந்ததே

விதையாக புதைந்துபோ என்றால்
விதையாகிப் பொசுக்கிப்போகிறாயே!
உன் காம விரிசல்களில் காலம் அழுவதா?

உறங்கிய பனித்துளியைச் சூரியன்
எடுத்ததது போல்
உலகமறிய சிட்டுகளைச் சூரன் விழுங்குவதா

மிருகமே உனக்கு இரத்தம்
தேவைப்பட்டிருந்தால்
வன்மத்தைக்குடித்திருக்கலாமே
மென்மையை ஏன் உறிஞ்சினாய்.

அசுர வதம் முடித்து ஆண்டவன்
அமைதி காக்கிறான் என்றா
அசராமல் வதை செய்து
கூட்டுப்புழுக்களின் குடிலை அழிக்கிறாய்.

இனி மலர்கள் ஓய்ந்துபோகலாம்
மகரந்தம் வீசாதா என்று
ஏங்கும் வரையில்
ஒரு யுகமானாலும் யுவதியாகாமல்.