கம்பனைக் காண்போம் -66/வளவ. துரையன்

அரசியல் படலம்

தயரதன் பெருமை

தாய்ஒக்கும் அன்பின் தவமொக்கும் நலம்ப யப்பின்
சேய்ஒக்கும் முன்நின்[று] ஒருசெல்கதி உய்க்கும் நீரால்
நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் அன்னான் [172
]

ஓர் ஆட்சியை நடத்துபவர் எப்படி இருக்க வேண்டும் என்று இப்பாடல் காட்டுகிறது. ஆள்பவரை அறிமுகப்படுத்தினாலே ஆட்சி பற்றி அறிந்து கொண்டுவிடலாம் அன்றோ? எனவேதான் கம்பன் அயோத்தியை ஆளும் தயரதனைக் காட்டுகிறான்.

அவன் தாயைப்போன்ற அன்புடையவன். உலகில் தாயின் அன்பு எந்தப் பலனையும் எதிர்பாராதது. அதனால்தான் எந்த வேண்டுகோளும் இல்லாமல் பின்னால் வரும் குகனைக் கம்பன் “தாயினும் நல்லான்” என்பான். தவம் என்பது அத்தவத்தைச் செய்யும் ஒருவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தர வல்லது. எனவே அத்தயரதன் நன்மைகள் தருவதில் தவத்தை ஒத்திருந்தானாம். ஒருவருக்குப் பிறக்கும் மகன் தான் செய்யும் கரும காரியங்களினால்தான் தம் பெற்றோரை நற்கதியில் கொண்டு சேர்க்கிறான். அதுபோல அம்மன்னன் நாட்டில் தீக்கருமங்களை ஒழித்து எல்லா உயிர்களையும் நல்ல கதியில் கொண்டு போய்ச் சேர்க்கிறானாம். ஒரு சிலர் அந்நாட்டில் நோய் போன்று தீமையாக இருந்தால் அத்தீமையையும் போக்கும் மருந்தாகவும் தயரதன் இருந்தான். அத்துடன் நுட்பமான நூல்களை ஆராயும் தன்மையில் அவன் அறிவை ஒத்திருப்பான். இப்படி தாய், தவம், மகன், மருந்து ஆகியவை போன்று அத்தயரதன் இருந்தான் எனக் கம்பன் காட்டுகிறான்.