
ஒற்றை மந்திரம் கற்றுக்கொண்டதில்
ஒரு வழிப் பாதையானது–
பாசம்.
நல்லுளோர் யாவரும் தள்ளி நிற்கையில்
சுற்றி மறித்தன–
துரோகங்கள்.
வேட்டை விலங்குகள் சூழச்சூழ
முறுக்கேறிய வீரம்–
வீழ்ந்துவிடாமல் போரிடச்சொன்னது.
தன்மானத் தைரியம் உடன்வர
காலப்பெருவெளியில் அலைக்கழிந்தன-
காத்திட தோள்தரும் மனங்கள்.
வார்த்தை அம்புகள்
வசவு ஈட்டிகள்
கேலிப்பேச்சு கதாயுதங்கள்
அவப்பெயருதைக்கும் கால்கள்
உண்மை நிலையின்
ஒற்றைச் சுடரை
விழிகளில் ஏந்தி
வியூகம் உடைத்தென்னை
வீழ்ந்துவிடாமல்
மீட்டெடுத்து
புதிதாய் என்னை
பிறந்திட வைத்திடும்
அந்த
கலியுகக் கண்ணனுக்காய்
கடுந்தவம் புரிந்தபடி
காலக்களத்தில் நிற்கிறேன்–
நான்!
