
நான் எழுதுவதை நானே அனுபவித்து
ரசிக்கிறேன். என் கவிதையை வேறு ஒருவர்
பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற அவசியம்
எனக்கேற்படவில்லை. எழுதுவதில் கிடைத்த
ஆனந்தம் போதுமானதாக இருக்கிறது.
உரக்க வாசித்து நானே கேட்டு
என்னையே பாராட்டிக் கொள்கிறேன்.
பிறர் வாசிக்காவிட்டால் அது கவிதை
யாகுமா என்று கேட்பவர்கள்
கேட்கட்டும். நேற்றைய என் கவிதைக்கு
இன்றைய ஒரு வாசகன் – நான் –
போதும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
யாராவது ஒருவன் – வேறு ஒருவன்
கேட்கட்டுமே – அதில் தவறில்லையே
என்று யாராவது கேட்கும்போது கேட்கட்டுமே
எனக்கு ஆட்சேபமில்லை என்று சொல்கிறேன்
கவிதை மட்டுமா இப்படி? எத்தனையோ
விஷயங்கள் இப்படி இருக்கின்றனவே
காதல், உண்மை, ஆனந்தம், அன்பு
வெறி, கோபம், தாபம் – வாழ்க்கையில்
முக்கியமானதெல்லாம் இப்படித்தான்
ஒரு தலைப்பட்சமானது தானே.
