கே. நல்லதம்பி/ஆர்.கந்தசாமி

கே. நல்லதம்பி (பிறப்பு: 1949) இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் இவர், கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல புத்தகங்களை மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கிடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார். நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’, விவேக் சான்பேக்கின் ‘காச்சர் கோச்சர்’, சாகித்திய அகாடமிக்காக ஸ்ரீநிவாச வைத்யா எழுதிய ‘ஓடை’ போன்ற பல சிறந்த படைப்புகளை தமிழாக்கம் செய்துள்ளார். இவருடைய சிறுகதைகளும் கவனம் பெற்றவை. ‘அத்தர்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. குவெம்பு பாஷா விருது, ஸ்பாரோ மொழியாக்க விருது உள்ளிட்ட பல விருதுகளை மொழிபெயர்ப்புக்காகப் பெற்றுள்ளார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இவரது ஆக்கத்தில் கன்னடம், தமிழ் இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளன.

கே. நல்லதம்பி
வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு 1949. மைசூரில். படிப்பு B.A., வரை. ஒரு தனியார் கம்பெனியில் வியாபாரப் பிரிவின் அகில இந்திய மேலாளராக 35 வருடங்கள் வேலை பார்த்து, ஓய்வுபெற்றவர். நிழற்படக் கலையில் ஆர்வமிக்கவர். பல உலக மற்றும் தேசியக் கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பல பரிசுகளும் பெற்றிருக்கின்றன. இந்தியா லலித கலா அகாடெமியில் இவரது 6 புகைப்படங்கள் நிரந்தர அருங்காட்சியகத்தில் இருக்கிறது. கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்த்து, பல கன்னட மற்றும் தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

குவெம்பு பாஷா பாரதி வெளியீடுகளான பெரியார் விசாரகளு (2017), தெங்கனமஹிளா லேககரு (2016) தொகுப்புகளில் தமிழ் கட்டுரைகள் கன்னடத்தில் மொழிபெயர்த்து வந்துள்ளன. குவெம்பு பாஷா பாரதிக்காக – சங்கக் கவிதைகள் சிலவற்றை கன்னட எழுத்தாளர் திருமதி. லலிதா சித்தபசவய்யாவுடன் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார். அவை ‘நிச்சம் பொசது’ (2016) என்ற தொகுப்பாக வந்துள்ளது. தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

நன்றி: தமிழ் விக்கி