
அம்மன் சன்னதித் தெருவில் ஆரம்பிக்கும் அந்த விளையாட்டு. அவளைப் பின்தொடரும் விளையாட்டு. செருப்பைப் பாதுகாக்கும் இடத்தில் கழட்டிப் போட்டு விட்டு மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குள் நுழைவாள் சந்திரா.
வன்னி மரத்தடி விநாயகர் ,பிறகு விபூதி பிள்ளையார், மீனாட்சியம்மன் , முக்குறுணிப் பிள்ளையார், வளர்ந்துவரும் ஆஞ்சநேயர் , சுந்தரேஸ்வரர், சரஸ்வதி, துர்க்கை , லட்சுமி , சனீஸ்வரர் என்று கும்பிட்டு முடித்து வந்து ஆடி வீதி சுற்றி திருவள்ளுவர் மண்டபம் அருகே வந்த அமரும் போது ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்.
இப்போதெல்லாம் அம்மன் வரிசையில் நின்று அருகே செல்வதென்றால் இன்னும் ஒரு மணி நேரம் ஆகி விடும். வாசலிலேயே அம்மன் தரிசனம் முடித்து முக்குறுணிப் பிள்ளையாரிடம் போய் விடுவாள். சுந்தரேஸ்வரரிடம் கூட்டம் இருக்காது. மதுரையில் மீனாக்ஷிக்குத்தானே முக்கியத்துவம். அவள் பின்னாலேயே சங்கர் தொடர்ந்து வருவதை சந்திரா கண்டுபிடித்தது ஒரு வாரம் கழித்துத் தான்.
திருவள்ளுவர் மண்டபத்துக்கு அருகே வைத்து ஒரு நாள் சொல்லிவிட்டாள் .
‘எனக்குப் பிடிக்கல’ .
‘ எனக்குப் பிடிச்சிருக்கே’ இவன்.
கோபத்தில் சிவந்த அவள் முகத்தை ஆசையோடு பார்த்தான்.பொன்னியின் செல்வன் குந்தவை திரிஷா போல் லேசாகக் கழுத்தை உயர்த்தி அவள் பேசுவது கோபத்தில் இருந்தாலும் அதுவும் ஒரு அழகுதான்.
மறுநாள் கல்லூரியில் அவனைத் தனியே அழைத்து விளாசித் தள்ளிவிட்டாள் வார்த்தைகளில்.
முடிவாகச் சொன்னாள் .
‘ கூடப் படிக்கும் ஒரே காரணத்திற்காகப் போலீசில் சொல்லாமல் விடறேன். இனிமேலும் இது மாதிரி பண்ணுனா எனக்கு வேற வழியில்லை.’
செய்தாலும் செய்துவிடுவாள் . நிறுத்திக்கொண்டான் , கோவிலுக்குச் சென்று அவளைப் பின் தொடர்வதை. ஆனால் அவளை மனதில் இருந்து ஒதுக்க முடியவில்லை. கல்லூரியில் அவளைத் தூரத்தில் இருந்து பார்த்தே துயரத்தைத் தணித்துக் கொண்டான். அவளும் கவனித்தாள் .
‘அவள் திமிர் புடிச்சவடா , அவளை மறந்துடு ‘ நண்பன் சேகர் .
‘ அந்தத் திமிர் தாண்டா அவகிட்ட எனக்கு ரெம்பப் புடிச்சது ‘
‘ உன்னைத் திருத்தவே முடியாதுடா ‘
விட்டு விட்டான் சேகர்.
ஒரு மாதம் ஓடியிருக்கும். ஒருநாள் கிராமத்திலிருந்து வந்திருந்த தன் நண்பன் ஒருவனைக் கோயிலுக்குக் கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயம்.. எல்லாச் சன்னதிகளும் சுற்றிவிட்டு திருவள்ளுவர் மண்டபம் அருகே வந்து அமரும் போது, சற்றுத் தள்ளி அவள். அவனை நோக்கி வந்தாள் . கண்களில் லேசான சிவப்பு. கோபத்தில் வரும் சிவப்பா. நடையில் ஒரு வேகம்.
சங்கருக்குச் சங்கடம். நண்பன் முன்னால் என்ன பேசிவிடுவாளோ . பயந்தபடி காத்திருந்தான். அருகில் வந்தவள் சொன்னாள் . ‘ என்ன இப்ப எல்லாம் நீங்க கோவிலுக்கு வர்றதே இல்லை’ சொல்லிவிட்டு நகர்ந்தாள் .
