கா(த்)தல்/கணேஷ்ராம்

கையெல்லாம் தட்டி சமிக்ஞை கொடுத்தாலும் வயிற்றெரிச்சலை நிறுத்த முடியவில்லை.

நடுவில் கொஞ்ச நாள் கோவிலுக்குப் போகாமல் முறுக்கிக் கொண்டு இருந்த காலம்.

அடாஸென்று சொல்ல முடியாது என்றாலும் அதற்குக் கொஞ்சம் மேலே ஒரு பெண் கோயிலுக்குப் போகும் நேரம், நானும் சிங்காரித்துக் கொண்டு ஹிந்தி டைப்ரைட்டிங் வகுப்பு போவதுதான்.

அந்த அம்மணி பெரிய பக்திமாடு. லேசுல வெளீல வராது.

நான் மனசு கொள்ளாது, ராமா ராமா என்று அடிக்கச் சொன்னால் ரமா ரமா என்று அடித்து, அந்த இன்ஸ்டிடியூட் ஓனர் அடிக்கவே வந்து விட்டார். அவர் பெண்ணின் பெயர் ரமா என்று அப்புறம் தெரிந்தது.

க்ளாஸ் முடித்து வெளியே வந்து கோயிலைக் கடக்கும் போது அந்தப் பெண்ணும் சொல்லி வைத்த மாதிரி வெளியே வரும்.

மனசுக்குள் லேசாக பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது உண்மை.

இப்படியே பதினைந்து நாட்கள் ஓடிப் போய் விட்டது.

அன்றைக்கு அந்தப் பெண் கோயிலுக்குள் நுழைய இருக்கும் போது, கொஞ்சம் தயங்கினாற் போல் இருந்தது.
நானும் அநிச்சையாகத் தயங்கினேன்.

அவள் என்னைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தாள்.

எனக்கு உயிரே போய்விட்டது. பதிலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பேயறைந்த மாதிரி நின்றேன்.

கிட்டே வருமாறு சைகை செய்தாள். நான் பொம்மை போல சென்றேன்.

“ஒரு சின்ன ரிக்வெஸ்ட் ப்ளீஸ்” என்றாள்.‌ பெண்பிள்ளை குரல்தான்.

நான் துரிதமாக சம்மதித்தேன்.

“இன்னிக்கு லேட்டாகாது.. உடனே வெளியே வந்துடுவேன்.. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா” என்றாள்.
எனக்கு இதயம் வாய்வழியே நழுவி விட்டது.
வகுப்பைக் கட்டடித்து விட்டு அங்கேயே நின்றேன். பத்து நிமிடம் பத்து யுகங்களாகக் கழிந்தது.

சொன்ன மாதிரியே சீக்கிரம் வந்து விட்டாள்.

“தேங்க்ஸ்” என்றாள்.

“எதுக்கு” என்றேன். புது அனுபவம் என்பதால் வாய் குழறியது. லேசாக வியர்த்தது.

“ஒண்ணுமில்லை… நேத்திக்கு தான் புதுசா செருப்பு வாங்கினேன்.. கோயில்ல கடைல விடலாம்னா காசு கேக்கறாங்க..வெளீல விட்டு, யாராச்சும் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னா என்ன பண்றது.. நல்ல வேளை, தெரிஞ்சவங்க நீங்க வந்தீங்க.. நிம்மதியா சாமியைப் பாத்துட்டு வந்தாச்சு.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ” என்று செருப்பை மாட்டிக்கொண்டு அகன்றாள்.

One Comment on “கா(த்)தல்/கணேஷ்ராம்”

Comments are closed.