யாருமற்ற சிலுவை/ப.மதியழகன்

சிலுவை தனித்திருக்கிறது தேவகுமாரன் எங்கே
மரணத்தின் குறியீடு மதச்சின்னமானது எப்படி
கைவிடப்பட்ட நிலையில் அவரது வாய்
முணுமுணுத்தது
பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்று
அதுவரை தச்சன் மகன் இயேசுவாக இருந்தவர்
பிதாவே உன்விருப்பம் அதுவானால்
அப்படியே ஆகக்கடவது
என்றவுடன் கிறிஸ்துவாக பரிமளிக்கிறார்
யூதாஸ் நாற்பது வெள்ளிக்காசுக்கு
விலைபோய்விட்டான்
ஆபிரகாமுக்கு முன்னிருந்தவர் யூதாஸைப்
பற்றியும் அறிந்திருப்பார்
முதல் முறையாக மனிதன் கடவுளானான்
மரணத்தை வென்று இயேசு உயிர்த்தெழுந்தார்
இயேசுவின் பிறப்பும் இறப்பும் புரட்சிகரமானவை
இவர்கள் தனக்கு சாட்சியாய் இருப்பார்கள்
என்றெண்ணித்தான் இறுதிக்காலத்தில் இயேசு
பன்னிரு சீடர்களின் பாதத்தையும் கழுவுகிறார்
இந்த சிலுவையில் தான் இயேசு மரித்தாரா
யாருமற்று கிடக்கின்றதே
கருணையும் அன்பும் மனுஷகுமாரனோடு
மரித்துவிட்டது
யார் சுமந்த சிலுவையோ தனித்திருக்கின்றது
சுமந்தவரின் இரத்தக்கறை கூட இன்னும் காயவில்லை
உண்மையைத் தேடும் ஒவ்வொருவருக்கும்
சிலுவைதான் பரிசா
எனக்குத் தெரியும் எனக்கான சிலுவையை எந்த
தச்சனோ செய்து கொண்டிருப்பான் என!

One Comment on “யாருமற்ற சிலுவை/ப.மதியழகன்”

Comments are closed.