கம்மாய்க் கரை /நாகேந்திர பாரதி

‘கம்மாய் உடையப் போகுது, கரையை ஏத்திக் கட்ட வீட்டுக்கு ஒரு ஆள் வாங்க’ என்று தண்டோரா சத்தம் கேட்டது. எதிர்பார்த்ததுதான். ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் மழை. வீட்டுக் கல்லுத் தட்டோடே கசிஞ்சு அங்கங்கே ஒழுக ஆரம்பித்து விட்டது. அதைப் பிடிக்க தரையில் வைத்திருக்கும் பாத்திரங்களில் கேட்கும் ‘டொய்ங்க் டொய்ங்க்’ சப்தம் . வெளியே ‘சொய்ய்ய்ய்’ என்று வானமே கிழித்துக் கொட்டுவது போல் பலத்த மழை.

பக்கத்து ஊர்க்காரன் வேறு அவன் கண்மாயை உடைத்து விட அது வேறு வந்து சேர்ந்து ரொம்பி விட்டது இந்தக் கண்மாய் . கண்மாய்த் தண்ணீர் கரையில் முட்டி முட்டி ஓரங்கள் கரைந்து இப்போது உடையப் போகிறது. முதலில் நுழைவது தெக்குத் தெருவில். அதற்கடுத்து கோயில், கீழத்தெரு, மேலத்தெரு வடக்குத்தெரு என்று ஊரே மூழ்கி விடுமோ என்ற பயம் எல்லோர் மனத்திலும்.

மம்பட்டியோடு வீட்டுக்கு ஒரு ஆள் கண்மாயை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். ‘காஞ்சிம் கெடுக்குது , அப்பப்ப பேஞ்சும் கெடுக்குது ‘ என்று அப்பத்தா அலுத்துக் கொண்டார். ஒரு வாரமாக , ‘அக்கடா ‘ என்று கண்மாய்க் கரைப் பக்கம் போக முடியவில்லை. வீட்டுக் கொல்லையில் குழிதோண்டி ‘ வெளி’க்குப் போகும் எரிச்சல் அவருக்கு.

மேட்டுப் பக்கம் மண்ணை வெட்டி எடுத்து கரை மேல் சேர்த்து விடும் முயற்சியில் ஆண்கள் கூட்டம் . களிமண்ணும் வெறுமண்ணுமாய் கலந்து கிடக்கும் அதை மம்பட்டியால் வாரி எடுத்து சட்டியில் போடும் வலுத்த கரங்கள். முந்தானையைத் தலையில் ‘சுடுமாடு’ கட்டி சட்டியைத் தூக்கிக் கொண்டு கரையில் ஏறும் பொண்டுகள் கூட்டம். அதை வாங்கி கரையில் பரப்பித் தேய்த்து விடும் இளவட்டங்கள். அதில் சிலருக்கு இடையே புன்னகையில் பரிமாறப்படும் காதல், மழைக்கு நன்றி சொல்லும். .

மழைக்கும் மனிதர்களுக்கும் இடையே அங்கே ஒரு போராட்டம் . சுற்றி அடிக்கும் காற்று, தண்ணீர் வரத்து அதிகமாகி கரையை நோக்கி மேலே மேலே ஏறும் தண்ணீர் மட்டம் . ‘இன்னும் மண்ணு லாரி வரலையே’ என்ற ஏக்கம் . அவ்வப்போது ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காப்பி கிளப். ‘

இன்னொரு போன் போடலாம்’

‘ தந்தி கம்பம் எல்லாம் சாய்ந்து கிடக்கு. போன் வேற கட்டாயிடுச்சு. அதோ மண்ணு லாரி வந்தாச்சு’ .

மண்ணு மூட்டைகளோடு ராம்நாட்டில் இருந்து வந்து சேர்ந்த லாரி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ‘சீக்கிரம் இறக்கி ஏத்துங்க’ என்று ஏகப்பட்ட குரல்கள் .ஆண்களும் பெண்களுமாக மூட்டைகளை தூக்கி மேலே கரையில் போட்டு உயரத்தை அதிகமாக்கி அங்கே ஒரே ஆரவாரம்.

‘பின்னாலேயே இன்னொரு மண்ணு லாரி வருது ‘என்ற குரலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு’ லாரி டிரைவருக்கு அந்த காப்பி கிளப்பில் வடை காப்பியோடு ஏக உபச்சாரம். வேர்வையும் மழைத்தண்ணீரும் கலந்து மின்னும் அந்த மனிதர்களின், நாலு முழ வேட்டி பனியன்கள் உடம்போடு ஒட்டி, சகதிக் கால்களோடு ‘சதக் சதக்’ என்று மண்மூட்டைகளை கரையில் அமுக்கும் ஒலி .

லாரி மேலிருந்து மூட்டையை ராசுவின் தோளில் சறுக்கி இறக்குகிறான் சோமு .’டேய் போன மாசம் நீ வெட்டின காயம் இன்னும் ஆறலே , அது மேலே மூட்டையை இறக்காதடா’ என்றபடி சிரிக்கும் ராசுவும் ‘ அய்யய்யோ , பாத்து இறக்கிறேண்டா, கோச்சுக்காதே ; என்ற சோமுவும் போனமாதம் சாதிச் சண்டையில் அரிவாளால் வெட்டிக் கொண்டவர்கள்.

One Comment on “கம்மாய்க் கரை /நாகேந்திர பாரதி”

Comments are closed.