மறக்க முடியாத சில நிகழ்வுகள்/ இந்துமதி

ஒரு முறை விமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ சார்.. உங்களை தெரியாதா’ என நான் ஆச்சரியத்துடன் பேச, அதன்பிறகு அவர் ‘நான் உங்கள் ‘தரையில் இறங்கும் விமானத்தின்’ தீவிர வாசகன்.

அந்தக் கதையை எத்தனை முறை வாசிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது’ என என் எழுத்தைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டார். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம் அது. தி.ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரும் இந்தக் கதை குறித்து தங்கள் கருத்தை கடிதம் மூலமாக எனக்குத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தக் கதையை அடிப்படையாகக்கொண்டு 15 வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் எடுத்திருந்தார்கள். கதை விவாதமே என் புத்தகத்தை வைத்துக்கொண்டு தான் நடந்திருக்கிறது. ஆனால் இப்படி என் கதையைப் பயன்படுத்தியதை என்னிடம் தெரிவிக்கவும் இல்லை. குறைந்தபட்சம் மூலக்கதை இந்துமதியுடையது என்று கூட டைட்டிலில் போடவில்லை.


சிவசங்கரி உடன் இணைந்து எழுதிய அனுபவம்

நாங்கள் இருவரும் இணைந்து ‘இரண்டுபேர்’ என்ற தொடரை எழுதினோம். மூலக்கதை என்னுடையது. ஆசிரியருக்குப் பிடித்திருந்ததால் இதனைத் தொடராக எழுதலாம் என்றார். ஒரு வித்தியாசமான முயற்சியாக இருவரும் சேர்ந்து எழுத முடிவெடுக்கப்பட்டது. தொடர் ஆரம்பிக்கும் முன்னர் போட்டோ ஷூட்டுக்காக சந்தித்துக்கொண்டபோது, தொடர் எப்படி எழுதுவது என்று கலந்தாலோசித்தோம்.

அதன்படி நான்கு வாரம் நான், நாங்கு வாரம் அவர் என மாற்றி மாற்றி எழுதினோம். அதில் எந்தவிதமான கஷ்டமும் எனக்கு இல்லை. தொடரின் போது இருவரையும் அட்டைப் படத்தில் போட்டார்கள். அந்தக் கதை தமிழகத்தை கலக்கிய கதை எனலாம். நிறைய கருத்துகள் வந்தன.

கலாச்சார மாற்றம் குறித்தான கதை என்பதால் எதிர்மறைக் கருத்துக்களும் விமர்சனங்களும் வந்தன. மொத்தத்தில் நிறைய வாசகர்களிடம் சென்றடைந்த தொடர் அது. என் ஸ்டைலில் நானும் அவர் ஸ்டைலில் அவரும் எழுதினோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. கதை வெற்றி அடைந்தது.

எழுதியதில் பிடித்தவை

தரையில் இறங்கும் விமானம், தொட்டுவிடும் தூரம், சக்தி 90, நெருப்பு மலர், தொடுவான மனிதர்கள்.

வாழ்க்கையின் தத்துவம்

அன்பு. எல்லாரிடமும் அன்பு செலுத்த வேண்டும். நான் சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தையும் நேசிக்கிறேன். யாரையும் யாரும் உடலால் மட்டுமல்ல, மனதாலும் காயப்படுத்தக்கூடாது என்பது என் எண்ணம். அன்பை மிஞ்சி இந்த உலகத்தில் எதுவுமில்லை
.
ஆண் எழுத்தாளர்கள் – பெண் எழுத்தாளர்கள்

எனக்குப் பிடிக்காத விஷயம் இது. எழுத்தில் ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் எனப் பிரித்துப் பார்ப்பது ஏன்? எல்லாரும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதுகிறார்கள். பெண்களும் எல்லா விஷயத்தையும் தன் எழுத்தில் பேசுகிறார்கள். பெண்களால முடியாதது ஒன்றுமில்லை எனும்படியாக இன்றைய பெண் எழுத்தாளர்கள் அதிரடியாக எழுதுகிறார்கள். அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்கள். ஆண் எழுத்தாளர்களும் வணிக ரீதியாக எழுதுகிறார்கள். பெண் எழுத்தாளர்களும் இலக்கியத்தரமாக எழுதுகிறார்கள். எழுத்துக்குக் கண்டிப்பாக ஆண்-பெண் வித்தியாசம் கிடையாது.

எழுத விரும்பும் பெண்களுக்கு சொல்ல நினைப்பது

என்றைக்குமே யாருமே தயவுசெய்து ஜன்னலில், பால்கனியில உட்கார்ந்து கொண்டு கதை எழுத நினைக்காதீர்கள். அனுபவம் உள்ள எழுத்துதான் நிற்கும். ஏதோ ஒரு அனுபவம், அந்த அனுபவம் நமக்குத்தான் நேர்ந்திருக்கவேண்டும் என்பதில்லை. பக்கத்து வீட்டில் நடந்தது, எங்கேயோ தெருவில் நடந்தது, யாருக்கோ நடந்ததாக இருந்தாலும் அந்த நினைவு நம்மை இம்சிக்கவேண்டும். அந்த வலியை நாம் உணர்ந்திருக்க வேண்டும் அல்லது அந்த மகிழ்ச்சியை நாம் உணரவேண்டும். அப்படி அனுபவப்பட்ட எழுத்துக்களாக எழுதுங்கள். அது கட்டாயம் உங்கள் பேர் சொல்லும்.

குங்குமம் தோழிகளுக்கு
சொல்ல விரும்புவது

சமைப்பது, கணவனை வேலைக்கு அனுப்புவது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலையை முடித்துவிட்டு தொலைக்காட்சி பார்ப்பது என்று இருக்காதீர்கள். அது மட்டும் வாழ்க்கை கிடையாது. சமூக நலனில் அக்கறை செலுத்துங்கள். சமூகப் பொறுப்புணர்ச்சியோடு இருங்கள். வீடு என்கிற ஒரு சின்ன வட்டத்தோடு நிற்காமல் உங்கள் பார்வை விரிவடையட்டும். நம்மால் முடிந்ததை பிறருக்குச் செய்யுங்கள்.

ஸ்ரீதேவி மோகன் குங்குமம் தோழிக்காக 2017 இல் எழுத்தாளர் இந்துமதியை, பேட்டி கண்டதில் ஒரு பகுதி

நன்றி: குங்குமம் தோழி

முகநூலில் : ஆர்.கந்தசாமி