
பள்ளி விட்டு வரும் மகளை
அழைத்துவர வாசலில் நிற்கிறாள்.
ஒரு பெரும் பழந்துணியில் கட்டி
வைத்திருந்தாள்
காலையில் இருந்து சேகரித்த
மாடுகளுக்கான தீவனப்புல்லை.
அம்பாரமாய் எக்செல் வண்டியின்
முன்புறம் இருந்தது.
வண்டியின் மேல் அமர்ந்து
இருபுறமும் காலூன்றி புல்கட்டுக்கு
அணைப்பு கொடுத்தபடி இருந்தாள்.
பள்ளிமுடிந்த மணி அடிக்க
இன்னும் நேரம் இருக்கிறது.
முன்புறக்கண்ணாடியில்
குனிந்து பார்த்து
முடியைச் சரிசெய்தாள்.
பொட்டை நேராக்கினாள்.
சேலையின் மேல் அணிந்திருந்த
ஆண்சட்டையின் மேல் பட்டனைப்
போட்டுக்கொண்டாள்.
தோட்டத்திற்குப் புல் பறிக்கப்
போகும்போது இனி
சேலைக்குப் பொருத்தமான
ஜாக்கெட்டைத் தேடிப் போடவேண்டும்
இப்படி திடுதிப்பென்று
வெளிஇடங்களுக்கு வரும்படி ஆகிறது
என்று நினைத்தாள்.
நல்லவேளை மணிக்கா
புள்ளைக வழக்கமா வர்ர பஸ்
பஞ்சராகி நிற்கிறது என்றாளே.
இல்லைனா புள்ளபாவம்
பசியோடு ஒருமணிநேரம்
அடுத்த வண்டிக்கு நின்றிருப்பாள்
என்று நினைத்தவள்.
கை யைச் சொறிந்தபடியே
மணிக்கட்டில்
ஒட்டியிருந்த ஒட்டுப்புல்லைப்
பிடுங்கி வீசியபடி யோசித்தாள்.
கடைசியாக எப்ப கடிகாரம்
கட்டினேன்.
கல்லூரிபடிக்கும் போது
கல்யாணம் முடிந்து அத்தை வீட்டிற்கு
சாப்பிடப் போனபோது கூட
கட்டினேனே.
எங்காவது மூலையில் கிடக்கும்.
புல்பிடுங்கும்போது
கடிகாரம் கையில் இருப்பதாக நினைத்ததும்
அவளுக்கு சிரிப்பு வந்தது.
சிரித்தபடியே நினைத்துக்கொண்டாள்
நம்ம புள்ளையையாவது
வெறும் படிப்பு படிக்க வைக்காமல்
வேலைக்கான படிப்பாய்
படிக்க வைக்கவேண்டும்.
