பானுமதி.ந

இந்தச் சிறுகதையில் மனிதர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து பிறகு திருந்துவது மையப்படுத்தப்பட்டிருக்கிறது.
கணேசன் என்ற கதாநாயகன் தலை தீபாவளிக்கு தன் மாமனார் வீட்டிற்கு வருகிறான். அவனும் அவன் வீட்டில் ஒரே பிள்ளை. அவன் தங்கை சுலோசனா. அவன் மனைவி வாணியும் வீட்டிற்கு ஒரே பெண். அவள் அண்ணன் நரசிம்மன். இரு குடும்பங்களும் சமமாக செல்வ நிலையில் இருந்தாலும் யாரோ சொல்வதைக் கேட்டு கணேசனின் பெற்றோர்கள் இன்னமும் சிறப்பாகக் கல்யாணம் நடந்திருக்கலாமென்றும், எவ்வளவு செய்தும் இவர்களுக்கு திருப்தியே இல்லையே என்ற மனக் குறையும் இரு சம்பந்தி வீட்டாரிடையே நிலவுவதால், தலை தீபாவளிக்கு அவன் மட்டும் வருகிறான்.
வண்டியில் வந்து இறங்குபவனை நரசிம்மன் ‘வாங்கோ கணேசன்’ என்று வரவேற்கும் போதே அவனுக்குக் கோபம் வருகிறது. ‘என்ன, மாப்பிள்ளையைப் பெயர் சொல்லி அழைப்பது? இன்னும் நான்கு வருடங்களில் வாடா கணேசன் என்று கூப்பிடுவீர்கள் போலிருக்கிறது’ என்று கோபப்படுபவன் வந்த வண்டியிலேயே திரும்பப் பார்க்க காலில் விழாத குறையாக அவனை நரசிம்மன் வீட்டிற்குள் அழத்து வருகிறான்.
இளம் மனைவி தரும் பக்ஷணங்களையும், காஃபியையும் ‘செங்கல் போல மைசூர்பாகு, எட்டு நாள் புளித்த பாலில் செய்த திரட்டிப்பால் என வீசி எறிகிறான்.
வாணி அழுதுகொண்டே கீழே விழுந்தததை திரட்டிப் போகிறாள். பின்னர் மாமனாரும், மைத்துனனும் ஹோட்டலிலிருந்து காசி அல்வா, சோன்பப்டி, புது காஃபி தந்து, சமையல்காரன் வந்து மாப்பிள்ளைக்குப் பிடித்த பக்ஷணங்கள் செய்வான் என்று சொல்கின்றனர். அலட்சியமாக அவர்களை உதாசீனப்படுத்திக் கொண்டே அனைத்தையும் சாப்பிடுகிறான்.
பத்திரிக்கை படிக்கத் தொடங்குகிறான். அதிலும் தலை தீபாவளி ஜோக்ஸ், கதைகள். அப்போது அவனுக்குத் தோன்றுகிறது- கதைகளில் வரும் மாப்பிள்ளைகள் பிறரிடம் எப்படி நடந்து கொண்டாலும், மனைவியிடம் அன்பாகத்தானே பேசுகிறார்கள் என்று.
மைத்துனனிடம் தன் மனைவி எங்கே என்று கேட்கிறான். கீழே வாணி அழுவதும், பயப்படுவதும், அவர்கள் சமாதானம் செய்வதும் நடக்கிறது. அவள் வரும் போது அவளின் அழகு அவனை மயக்குகிறது. ஆனால், பாதி உறக்கம்.
அன்றிரவே அவனுக்கு ஜுரம் வந்து நான்கு நாட்கள் படுத்து விடுகிறான். ஓரளவு குணமாகும் போது வீட்டில் அண்ணனும், தங்கையும் மட்டுமே இருக்கிறார்கள்;
அவர்கள் இவனைப் பார்த்து பயப்படுகிறார்கள்; பார்த்துப் பார்த்து உபசரிக்கிறார்கள்; கஞ்சி போட்டுக் கொடுப்பதும், வென்னீரால் உடலைத் துடைத்து உடை மாற்றுவதும் …அவர்களின் கரிசனம் இவனுக்கும் தேவையாக இருக்கிறது.
தன் தங்கைக்கு பிரசவ நேரத்தில் சிறிது உடல் கோளாறு ஏற்பட்டு அவளது கணவன் அதற்காக கோபம் கொண்டு கத்தியதையும், மருத்துவ செலவிற்காக கணேசனின் அலமாரியிலிருந்து ரூ 200/- எடுத்து செலவு செய்ததையும், அது அலுவலகப் பணம் என்பதால் வாணியின் பெற்றோர்கள் உடனே பணத்தை எடுத்துக்கொண்டு இக்கட்டிலிருந்து தன் குடும்பத்தை மீட்கச் சென்றதையும், தனக்கு மருமான் பிறந்திருப்பதையும், அனைவரும் நலம் என்பதையும் அறிந்த கணேசன் தன் நடத்தைக் குறித்து வெட்கப்படுகிறான்.
நரசிம்மனை தன்னை வா, போ என்று உரிமையோடு பேசச் சொல்கிறான். வாணியிடம் பேசிய இனிய மொழிகள் அவனுக்கு அருமையாகத் தோன்றுகிறது. நரசிம்மனிடம் சொல்கிறான் “தீபாவளிக்கு முன்னர் வந்து தீபாவளி முடிந்ததும் சென்றுவிடும் மாப்பிள்ளைகள் தீபாவளி முடிந்த பின்னர் வேட்டகத்தில் தங்கினால், பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளைக்காக எத்தனை செலவு செய்கிறார்கள், அதனால் எத்தனை பணக் கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.”
உறவுகள், நம்பிக்கை, அன்யோன்யம் இவற்றால் அமையும், வலுப்பெறும்; உதாசீனம் உறவில் வெறுப்பை வளர்த்துவிடும். இதை இந்தக் கதை சிறப்பாகச் சொல்கிறது. பெண்ணைப் பெற்றவர்களை நல்லவர்களாகக் காட்டும் ஒரு அவசியத்திற்காக கணேசனின் தங்கைக்கு ஒரு பிரச்சனை என்று கதாசிரியர் கொண்டு வந்திருக்கிறார். உறவுகள் சுமுகமாக இருப்பதற்கான ஒரு அறிவுப் புகட்டல் இதில் தென்படுகிறது. கதை தொடங்கி முடியும் வரை சுவை குன்றாமல் எழுதியுள்ளார்.
