வருடப் பிறப்பே…/கு.மா.பா.திருநாவுக்கரசு

எல்லா நாட்களும்போல் தான்
எல்லோருக்கும் புத்தாண்டின்
பொழுதும் விடிகிறது!

வீட்டுக்கு வந்த
மகா லட்சுமியாய்…
வாசலெங்கும் வரவேற்கும்
வண்ணக் கோலங்கள்!

பாட்டுச் சத்தமுடன்
பக்திப் பரவசங்கள்!
கூட்டங் கூட்டமாய்
கோவிலெங்கும் தரிசனங்கள்!

பூமலர்போல் புன்னகையை
புரியும் மக்கள்!
வார்த்தைகளால் வெளிப்படுத்தும்
மன வாழ்த்துக்கள்!

நாவினிக்க இனிப்புகளும்
வழங்குகின்றார்!
ஈவிரக்க இதயமுடன்
உதவி செய்வார்!

முதுவயதுப் பெற்றோர்கள்
முடங்கி யுள்ள
கருணை இல்லம் கதவுகளைத்
திறந்து வைக்கும்!

ஓராண்டு கடந்தாலும்
ஒருநாள் கூத்து,
மாறாமல் ஆண்டாண்டும்
தொடர்ந்திருக்கும்!

வாராது போல் வந்த
வருடப் பிறப்பே…
நாள்தோறும் நல்லனவை
நிறைய வேண்டும்!