ஆண்டு / முருகு

நீண்டு முடிந்து மீண்டும் வந்து
நீண்டு முடியும் ஆண்டெனப் படுவது…

கோள்கள் யாவும் அதனதன் கோட்டில்
கொஞ்சம் கூடத் தடம் மாறாமல்!

காலம் காலமாய்க் கதிரவனைக்
கணக்காய் வலம் வரும் கால அளவு…

ஆங்கிலம் தமிழ் எதுவாயினும்…
அவரவர் கணக்கில், விருப்பில்…

ஆரம்பம் எதுவாயினும்
அளவு ஒன்று தான்!!!

நொடி மணித்துளி மணியெனத்
தொடர் நாள், வாரம், மாதமென…

அடுத்தடுத்த சுழற்சியில்…
அடுத்தடுத்த ஆண்டுகளாய்…

கடமை தவறுவதில்லை கோள்கள்!
காத்திருப்பதில்லை எவருக்கும்!

தப்பித் தவறித் தடம் மாறியதாக
இடம் பெற்றதில்லை வரலாற்றில்!

ஓய்வெல்லாம் எடுத்ததில்லை!
நோய் வாய்ப் பட்டதில்லை!

ஆண்டு பிறந்த களிக் கூத்தெல்லாம்
கண்டு கொண்டது கூட இல்லை!

சுழன்று கொண்டே கோள்கள்
சுட்டும் உண்மை புரிகிறதா…