இன்று/வளவ. துரையன்

அப்பா முதன்முதல்
ஏரியில் தூக்கிப்போட்டு
நீச்சல் கற்றுத் தந்ததும்

தளும்பும் ஏரியில்
தண்ணீர்ப் பாம்பு பிடித்ததும்

வாழைமரத்தைக் கட்டுமரமாக்கி
லாரி டியூபைத் தோணியாக்கி
மிதந்து சென்றதும்

நடு ஆழத்தில் மண் எடுக்கபோய்
மூச்சுத் திணறி வந்ததும்

கரையோரம் நீக்கி
நீந்தி வருகையில் குளிக்கும்
அழகு மகளிரைப் பார்த்ததும்

நீச்சல் தெரியாமல்
கரையோரம் குளிப்பவர்களைக்
கேலி பேசியதும்

இன்று

நான்கு ஆறு கொண்ட
நாற்புறச் சிறையில்
கொட்டும்குழாயில்
சொட்டும் தண்ணீரில்
கலந்திருக்கின்றன.