அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்/சோ தர்மன்

பொதுவாக எங்கே புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும் கலந்து கொள்வதோடு நான் யாரென்று சொல்லாமலே பதிப்பாளர்களிடம் பேசுவதுண்டு.ஒரு சிலர் என்னை அடையாளம் கண்டு கொண்டாலும் நான் கேட்கிற தகவல்களை சொல்வார்கள்.

நான் அறிந்த வரையில் நம் மக்களிடம் இன்னும் பொது வாசிப்பு மேம்படவில்லை.தமிழகத்தின் ஜனத்தொகையோடு ஒப்பிட்டால் பொதுவாசிப்பிற்கான புத்தகங்களின் விற்பனை மகா கேவலம்.

இப்போது நூலகங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுக்கான வாசிப்பு மற்றும் பயிற்சி மையங்களாக மாறிவிட்டன.இதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன்.பயிற்சிக்கான கட்டணங்கள் பல ஆயிரங்கள் என்றாகி விட்ட நிலையில் நூலகங்களே பெரும் உதவியாக இருக்கின்றன.அந்த அளவுக்கு பொது வாசிப்பிற்கான வாசகர்கள் அங்கே வருவதில்லை.

புத்தகக் கண்காட்சிகளில் பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பதிப்பகங்கள் கவலையே இல்லாமல் நல்ல லாபம் பார்க்கிறார்கள்.ஆனால் பொது வாசிப்பிற்கான இலக்கியப் புத்தகங்களைப் பதிப்பித்துவிற்பனை செய்யும் பதிப்பகங்களின் பாடு திண்டாட்டமே.

அரசு கொள்முதல் செய்யும் புத்தகங்களிலும் தரமான எழுத்துக்கள் இடம் பெறுவது சொற்பமே.இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கொஞ்சம் யோசித்தால் நல்லது என்று நினைக்கிறேன்.பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மிகமிகக் குறைவு.இதுதான் அடிப்படைக் கோளாறு என்று நான் நினைக்கிறேன்.

அரசு வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பல் வேறு முயற்சிகள் செய்கிறது.பல லட்சங்கள் செலவு செய்கிறது.ஆனால் அவ்வளவாக முன்னேற்றம் இல்லை.என்ன செய்யலாம்?எப்படி முன்னேற்றலாம்?தரமான இலக்கியப் புத்தகங்களை மாணவர்களிடம் எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்?

ஒவ்வொரு மாவட்டத்திலு ம் ஏராளமான தரமான இலக்கியவாதிகள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை அரசு கண்டறிந்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் போய் மாணவர்களுடன் உரையாட வைக்கலாம்.நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதுடன் இலக்கிய ஆர்வத்தை தூண்டி படைப்பாளர்களாக ஆக உதவலாம்.

ப்ரியாக இருந்தால் எங்கள் பள்ளிக்கு எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிற சில பள்ளி கல்லூரிகள் உண்டு.இதைப் பற்றிய விவாதங்களை நாம் முன்னெடுக்கலாம்.சரியான ஆலோசனைகளை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு கொண்டு போகலாம்.

நாம் செலுத்துகின்ற வீட்டு வரியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நூலக வரி என்று வெள்ளைக்காரன் காலத்திலேயே வசூலித்திருக்கிறான் என்றால் போட்டித் தேர்வுகள் எதுவுமில்லாத அந்தக் காலத்திலேயே புத்தக வாசிப்பின் அவசியத்தை வெள்ளைக்காரன் உணர்ந்திருக்கிறான்.