காமராஜ் அவென்யூவில் குரங்கு/

ஜெயராமன்ரகுநாதன்

தொள்ளாயிரத்தி எழுப்பதி ஒண்ணோ ரெண்டோ, சரியாக நினைவில்லை.

”ஏண்டா பவானிக்குன்னு வெச்சிருந்த வாழப்பழத்தையும் நீயே எடுத்துண்டியா?”

அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.

“போம்மா உனக்கு வேற வேலையில்ல! நா என்னிக்கு அவளோடத எடுத்து சாப்பிட்ருக்கேன்!”

சொன்னாலும் கொஞ்சம் எனக்கு உதறல்தான்.

போன மாசம் எவர்சில்வர் சம்புடத்தில் வைத்திருந்த பாதாம் பருப்பு, ஃப்ரிட்ஜில் ஓரமாக மறைத்து திணிக்கப்பட்ட திராட்சை, கார்த்திகைக்கு பண்ணின அவல் பொரியில் மிச்சம் வைக்காமல் உள்ளுக்கும் வெளியேவுக்கும் நடந்து நடந்து தின்று முடித்தது என்று என் வண்டவாளங்களை விலாவாரியாக எடுத்து விடுவாள்.

நல்ல வேளை அன்று என்னை விட்டுவிட்டாள்.

”இங்கதானே டைனிங் டேபிள் மேல வெச்சேன்! இந்தாடி! இதான் சாக்குன்னு ஓடப்படாது. சீப்புலேர்ந்து வாழப்பழத்தை சாப்பிடு!”

“எங்கம்மா சீப்பு இருக்கு?ஒண்ணையும் காணோமே!”

அப்போதுதான் உறைத்திருக்க வேண்டும், வேறு ஏதோ விருந்தினரின் கைங்கர்யம் என்று!

“பூனை கீனை வந்திருக்குமோ?”

”பூனை வாழப்பழத்த சீப்போட சாப்பிடுமா, என்ன அல்லி?”

அதானே!

பின் பக்கம் கதவைத்திறந்து போன அம்மாவின் வீல் குரல் எங்களைப்பதற வைத்தது.

“என்ன என்ன என்ன ஆச்சு?”

அய்யோ குரங்கு?! எத்தன பெரிசு!”

எனக்கு மாணிக்கம் கத்தரிக்காயை விட குரங்கு சுவாரஸ்யப்பட்டு விட்டதால் நானும் ஓடினேன்.

“போகாதடா! கடிச்சு வெக்கப்போறது!”

ஜன்னல் வழியாகப்பார்த்தால் நல்ல இரண்டடி உசரத்துக்கு புஷ்டியான குரங்கு பின் பக்க ஒதிய மரத்தின் கீழ்க்கிளையில் சம்பிரமாக அமர்ந்து வாழைப்பழ சீப்பை காலி பண்ணிக்கொண்டிருந்தது.

சரி விடு! சாப்பிட்டுட்டு போய்டும்!”

இல்லை தப்பு!

அடுத்த ஒரு வாரத்துக்கு ரகளை பண்ணியபடி அங்கேயே வளைய வந்துகொண்டிருந்தது.

நல்ல வேளை, ஜன்னல் வழியாக வர அதன் உடம்பு இடம் கொடுக்கவில்லை. அம்மா சர்வ ஜாக்கிரதையாக கதவை மூடி வைத்திருந்தாலும் இரண்டாம் நாள் மெதுவாக பின் பக்க கதவைத்திறந்து பார்த்தாள்.

சமர்த்தாக உட்கார்ந்துகொண்டு அப்படியும் இப்படியும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த து.

“பாவண்டா இங்கியே சுத்திண்டு இருக்கு! போக வழி தெரியல போலருக்கு!”

ஒரு தட்டில் சாதம் கூடவே தொட்டுக்க கத்தரிக்காய் கறி! நான் தொடவே மாட்டென் என்பதால் என் பங்கை அதுக்கு கொடுத்துவிட்டாள்.

அடுத்த நாள் அதைக்காணும்!’

”என்ன அல்லி உன்னோட கத்தரிக்காய் கறி அதுக்கே ஒத்துக்கலியா?”

அப்பா கிண்டலடித்தாலும் அன்று சாயங்காலமே திரும்பி வந்துவிட்டது. வரும்போது கையில் கிளாக்ஸோ பிஸ்கெட் பாக்கெட்!

“பாரதியாத்துலேர்ந்துதான் கொண்டு வந்திருக்கு! குழந்தை நடராஜோடது!”

லாண்டிரி ராஜுவுக்கு செய்தி போக, அவன்”இதின்னாங்க ஒரு கொரங்கை விரட்டறதா பெரிய விஷயம். போங்க நா பின்னாடியே வர்ரென்!”

கையில் சோனியாக ஒரு சுள்ளியுடன் வந்தான்.

நாங்களெல்லாம் கதவை மூடிவிட்டு கம்பி ஜன்னல் வழியே பார்த்தோம்.

“ந்தா ந்தா! போ போ” என்றபடி சுள்ளியை காற்றில் வீசினான். வாழைப்பழ தோலியில் உள்ளதை சுரண்டித்தின்றுகொண்டிருந்த குரங்கு ராஜுவைக் கவனிக்க்கூட இல்லை. ராஜு அந்த தற்காலிக அலட்சியத்தில் உந்தப்பட்டு ரோஷத்துடன் அருகில் போனான். இப்போது குரங்கு வாழைப்பழத்தோலியை முடித்துவிட்டு நிமிர, எதிரே ராஜு கையில் சுள்ளியுடன் நிற்க, கர்ர்ர்ர் என்ற உறுமலுடன் ஒரு முறைப்பு!

சுள்ளியை எறிந்துவிட்டு ராஜு குதித்துப்பின் வாங்கி சைட் பக்க தோட்டம் வழியே ஒடி வாசலுக்கு வந்து விட்டான்.

”என்ன ராஜு! ஓடி வந்துட்டே?”

“இல்லீங்க! இது நாட்டுக்கொரங்கு! இங்கித்து பக்கம் இல்ல. அதான் மெரள மாட்டேன்னுது! தா வர்ரேன்!”

வேர்த்து விட்டிருந்த ராஜு அன்று போனவன் பிறகு கண்ணிலேயே பட வில்லை. அன்று கடையையே முடிவிட்டு ஜூட் விட்டுவிட்டான்.

அடுத்த ரெண்டு நாளும் குரங்கு சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தது.

தெரு நாயெல்லாம் குலையோ குலை என்று குலைக்கும் இது சட்டையே பண்ணாமல் காம்பவுண்டு சுவர், கம்பி கேட்டு எதிர் வீட்டு ஜெயமணி பால்கனி அடுத்த வீட்டு இரும்பு கிராதி என்று வளைய வந்து கொண்டுதான் இருந்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை மதார்ஷா வந்தான்.

அவன் வருடத்துக்கு இரண்டு மூன்று முறை வந்து மெத்தை தலைகாணி ரிப்பேர் செய்து தருவான்.

“அட என்னங்க குரங்குக்கு போய்.! ஒரு வாளப்பளம் எட்த்தாங்க!”

மறத்தமிழ் வழக்கப்படி கையில் இரண்டு வாழைப்பழங்களும் ஒரு தாம்புக்கயிறையும் எடுத்துக்கொண்டு மரத்தருகில் சென்றான். குரங்கு அவனையே பார்த்துக்கொண்டிருந்தது.

ஒன்றும் நிகழவிலை.

”பயந்துட்ச்சிங்க! இப்ப பாருங்க இங்க வந்து மாட்டுவாரு!”

மதார்ஷா இன்னும் அருகில் போக, அடுத்து நிகழந்தவை எனக்கு இன்னும் பஃப்ஃபென்று புகை மூட்டமாகத்தான் நினைவில் இருக்கிறது.

கீச்கீச் என்ற சப்தம். கிளையில் இருந்த குரங்கை ஒரு கணம் காணும். மறுபடி கீச் கீச்!

இப்போது மதார்ஷாவின் அபயக்குரல்.

நாங்கள் அடுத்து கண்ட காட்சி குரங்கு மரத்தில் அதே கிளையில். கையில் இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் தாம்புக்கயிறு. இங்கே மதார்ஷ லுங்கி இரண்டாகக்கிழிபட்டு கால் முட்டிக்கு கீழே ரத்தக் கோடுகள்.

”இது காட்டுக்கொரங்கு! அதான் மொரடாயிருக்கு! அடுத்த வாரம் வர்ரேங்க!”

ஜகா வாங்கி காணாமல் போனான்.

அப்பாவும் அடுத்த வீட்டு கோபாலன் மாமாவும் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, பிற்பாடு ப்ளு கிராஸுக்கு ஃபோன் பண்ண, வண்டி அரை மணியில் வந்துவிட்டது.

வந்த ஆசாமி கையில் ஏர் கன் மாதிரி துப்பாக்கி வைத்திருந்தார்.

“அய்யோ சுட்டுடப்போறீங்களா?”

”இல்லம்மா! இது தூக்க மருந்து இஞ்செக்ட் பண்ண!”

எங்கள் வீட்டு சமையல் அறை ஜன்னலில் மறைந்த படி பார்த்தால், குரங்கின் துரதிர்ஷ்டம், அது துப்பாக்கியின் நேர் லைன் ஆஃப் விஷனில் மாட்டியது.

டப்பென்ற சப்தத்துடன் தூக்க தோட்ட அதன் விலாவில் பாய வலித்திருக்க வேண்டும் கீச்சென்று ஒரு முறை கத்திவிட்டு விலாவைத்தவிக்கொண்டது. பிறகு கையில் வைத்திருந்த எதையோ தின்ன ஆரமித்தது.

பார்த்துக்கொண்டே இருந்தோம். இரண்டு முறை புதுசாகப்பிறந்த குழந்தை போல கொட்டாவி விட்டது. அப்படியே மரக்கிளையில் சாய்ந்து தூங்கி விட்டது.

ஆசாமி இப்போது ஒரு கம்பு அதன் நுனியில் பக்கிள் வைத்த திக்கான நாடா போன்ற ஒரு சமாச்சாரத்துடன் குரங்கை நெருங்கினார். மெதுவாக அந்த நாடாவின் சுருக்கை அதன் கழுத்துக்கு கொண்டு போய் பட்டென இழுக்க அது எலாஸ்டிக்கின் சகாயத்தில் குரங்கின் கழுத்தை இறுகிப்பிடித்துக்கொண்டுவிட, அரைத் தூக்கத்துலும் தனக்கான ஆபத்தை உணர்ந்து ஒரு சில கீச்சுக்களோடு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது.

அப்படியே குழந்தை மாதிரி அதைத்தூக்கிக்கொண்டு ஆசாமி வண்டியி ஏற்றினார்.

“பார்த்து பார்த்து அதுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?’

அம்மா பதறினாள்

“ஒண்ணியும் ஆகாதும்மா! நாங்க பாத்துக்கறோம்!”

வண்டி நகர்ந்த பின் நான் பார்த்தேன். அம்மாவின் கண்களில் நீர்.

“என்னம்மா என்ன ஆச்சு!”

“பாவண்டா! அதுக்கு குழந்த குட்டிங்க இருந்திருக்கும் போக வழி தெரியாம இங்கியே திணறிண்டு இருந்தது! இப்ப எங்கியோ கண் கணாத இடம்! என்ன ஜென்மமோ!”

பாஷையே வேண்டாம், அம்மாக்களுக்கு எல்லாம் புரியும்!

May be an image of animal and outdoors

One Comment on “காமராஜ் அவென்யூவில் குரங்கு/”

Comments are closed.