ஆசாரக் கோவை/வளவ. துரையன்

  1. பழைமையோர் கண்ட முறைமை
    (இன்னிசை வெண்பா)

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள் விளக்கம்

உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு உடையவர் ஒரே ஒரு உடை உடுத்தி பலர் இருக்கும் சபைக்கு செல்ல மாட்டார்கள். இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

  1. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
    (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.

பொருள் விளக்கம்

தலையில் தடவிய எண்ணையை எடுத்து உடலில் தடவக்கூடாது. பிறர் உடுத்திய உடையை உடுத்தக்கூடாது. அடுத்தவர் அணிந்த செருப்பு அணியக்கூடாது, பிறரிடம் இருந்து இரந்து எதையும் பெறக்கூடாது.

  1. செய்யத் தகாதவை
    (இன்னிசை வெண்பா)

நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.

பொருள் விளக்கம்

நீருள் மூழ்கி குளிக்கும் போது கண்ணை திறந்து பார்க்கக்கூடாது, நிலத்தை காலால் கீறக்கூடாது, இரவில் எந்த மரத்தின் கீழும் தூங்கக்கூடாது, (இரவில் மரங்கள் சுவாசிக்கும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் எடுத்து கரிமல வாயுவை வெளியிடும். இது தூங்குபவரை மூச்சு முட்டச் செய்யும்.) நோய்யால் துன்பப்பட்டாலும் தண்ணீரில் கை வைக்காமல் (தூய்மை செய்யாமல்) உணவைத் தொடக் கூடாது. எண்ணையை தொட்டு தடவிய பிறகு குடிநீரை தொடக்கூடாது. புலையரைப் (தீயநெறி உடையவரை) பார்க்கக்கூடாது. இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.

  1. நீராடும் முறை
    (இன்னிசை வெண்பா)

நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்.

பொருள் விளக்கம்

புனித நதிகளில் நீராடும் போது, ஆய்ந்த அறிவுடைய நல்ல நெறியில் உள்ளவர்கள் ஒருநாளும் நீந்த மாட்டார்கள், , நீரை குடைந்து சேறாக்காமாட்டார்கள், அதில் விளையாட மாட்டார்கள். அதே போல் அந்த நீரில் எச்சில் உமிய மாட்டார்கள், தலையில் எண்ணை இல்லாமல் தலை காய்ந்து இருந்தாலும் தலை மூழ்காமல் உடல் மட்டும் நனையுமாறு குளிக்கமாட்டார்கள்.