விடுதலை/ஆர்க்கே.

ஒரு சொற் கூட்டத்தின் முடிவில்
கவிதை கரையேறுகிறபோது
பிற வார்த்தைகள் விடைபெறுகின்றன.

சங்கமத்தின் முகத்துவாரத்தில்
காடு மலை கழனியெலாம்
அளந்து திளைத்த நதி கடலுடன்
விடை பெற்றுக்கொள்கிறது.

இரவெலாம் வானை
அழகுபடுத்தி குளிர்வித்த நிலா
கதிரவன் உதிக்கையில்
விடை பெற்றுக்கொள்கிறது.

கடைசி இழுப்பின் கங்குநுனியில்
சாம்பல் பூத்தபடி
ஒரு சிகரெட் விடைபெற்றுக்கொள்கிறது.

இச்சையா இம்சையா என்பதல்ல
இருப்பு நிலை.
காலப்பயணத்தில் எப்போதும்
தன்னிச்சையாக நிகழ்வதாய்த்தான்
விடைபெறுதல்கள்.!